தணல் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா - Appu Movies

Sunday, July 5, 2026

தணல் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா


 இருள் பிரியாத அந்த வைகறை பொழுதில் எழுந்திருக்க மனமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் ஜானகி. 


  “ம்மா....” என்று ரீங்கார தோணியில் குரல் கொடுத்தது கொட்டிலில் கட்டி இருந்த பசு.  அடுத்து இருந்த ராமர் கோவில் மடத்திலிருந்து பஜனை கோஷ்டி ஒன்று வைகறைப்பொழுதின் நாதத்தோடு சங்கும் ஜாலராகவும் முழங்க பஜனை பாடிக் கொண்டு சென்றது. 


  மார்கழி மாத குளிர் ஊசி முனையாய் உடம்பை துடைப்பது கூட பொருட்படுத்தாமல் இருள் மண்டி கடந்த அந்த நேரத்தில் கை விளக்கின் துணையோடு வாசல் தெளித்து பட்டுப்பாய் விரித்தார் போல் வாசல் முகப்பில் பெரிதாக கோலம் போட்டுக் கொண்டிருந்தால் எதிர் வீட்டு பார்வதி. 


  கொல்லைப் புறத்தில் வேலைக்காரி தனம் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.  ராமர் கோவில் ஒலி பெருக்கியில் இருந்து இனிமையாய் தவழ்ந்து வந்த திருப்பாவையின் புனித நாதத்தை அமுக்குவது போல் அந்த ஓசை அபஸ்வரமாய் ஒலித்தது.


  மாடியில்  தம்பி மூர்த்தி ஆங்கில “பொயரி”யை உருப்போடும் ஓசை! சமையலறையில் அன்னம்மா கிழவி ஸ்டவ்வை பற்ற வைத்ததால் உண்டான “கிர்” ரென்ற சப்தம், கிணற்றடியில் பச்சைத் தண்ணீரை வாளி  வாளியாய் அள்ளிக் கொட்டிக்கொள்ளும் அம்மாவின் அவசரம்.


  காரியங்கள் தொடங்கி விட்டன.  இனி அது ஓய்ந்து அடங்கும் நேரம் எப்போதோ? 


  ஜானாவுக்கு இன்னும் எழுந்திருக்க மனமில்லை. எழுந்து என்னத்த சாதிப்பது? எப்போதும் ஒரே மாதிரி அம்மாவுக்கு ஒத்தாசை செய்வதும், சமையல் பாட்டிக்கு காய்கறி அரிந்து கொடுப்பதும், தண்ணீரை இறைத்துக் கொட்டுவதும், சாப்பாட்டுக் கடையை ஒழுங்குபடுத்துவதும்... சே!


  எல்லாம் மற்றவர்களுக்காக தான்.  அவளுக்கென்று ஏதாவது உண்டா? இந்த வீட்டில் வேண்டாத விருந்தாளி தான் அவள். 


  “அடி ஜானா, .இன்னும் என்னடி தூக்கம்? காலங் காத்தாலே எழுந்திருக்காமே பீடை பிடிச்ச மாதிரி இன்னும் தூங்கிட்டு இருக்கியேடி? வந்த வழி தான் சரியில்லே, இருக்கிறதாவது ஒழுங்கா இருக்க வேண்டாமோ? பொழுது விடிஞ்சும் இன்னும் படுத்துண்டு இருக்கியேடி, உனக்கு எப்படியடி விடிவு பொறக்கும்?”  ஈரப் புடவையை உடம்பில் சுற்றியபடி  போகிற போக்கில் கடுகு பொரிவது போல் பொரிந்து விட்டு போய்விட்டாள் அம்மா.


  அவளை சொல்லி குற்றமில்லை. 


  காலா காலத்தில் கரை சேர வேண்டிய மகள் நாலு பேரு பரிதாபப்படும்படியான நிலையில் வீட்டில் முடங்கி கிடப்பது பார்த்து பார்த்து அலுத்து கசந்து விட்ட விரக்தி.


  பாகீரதியின்  வயிற்றில் பிறந்த ஆறில் மூத்தவன் ஸ்ரீராம் வெளிநாட்டு தூதரகத்தில் உயர்ந்த பதவியில் கை நிறைய சம்பளம் வாங்குகிறான். அடுத்த ஐந்தும் பெண்கள்.  கடைசி தான் ஜானகி.  நான்கு பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது.  பெரியவள் பாக்கியலட்சுமி, டெல்லியில் வாழ்க்கை பட்டிருக்கிறாள். அடுத்தவள் கோமதி திருச்சியில் ஹை ஸ்கூல் ஆசிரியருக்கும், மூன்றாமவள் சுமதி துர்காப்பூரில் இன்ஜினியராக இருக்கும் ராமநாதனுக்கும்,  நான்காமவள் உள்ளூரிலேயே அத்தை பிள்ளையான பெட்ரோல் இன்ஸ்பெக்டருக்கும் வாழ்க்கைப்பட்டு அமோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


  கடைசியாக பிறந்த ஜானகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அந்த வீட்டில் எல்லோருமே நல்ல அழகு.  பரம்பரையில் யாருமே கருப்பு இல்லை.  துலக்கி விட்ட செப்பு கலசம் போல் நல்ல சிவப்பு.  ஆனால் கடைக்குட்டி எங்கிருந்து வந்தாலோ ஒடிசிலான உடம்பும், கருப்புமாய் முகத்தில் ஒரு தேஜஸ் கிடையாது, குடும்பத்துக்கு ஒரு திருஷ்டி பரிகாரமா இருந்து இறந்து போன தன் நாத்தனாரை அவள் கொண்டிருப்பதாக அவள் அம்மா அவளை கரித்து கொட்டுவாள்.


  இதோடு இருந்தால் பரவாயில்லையே! 


  அவள் உயிரை வாங்காமல் சித்திரவதைப்படுத்தும் அந்தப் பாழாய் போன வலிப்பு நோய் வேறு. அது மட்டும் இல்லை என்றால் வரதட்சனை கொஞ்சம் கூட போனாலும் இந்நேரம் அவளும் தன் தமக்கைகளை போல்  கணவனோடு மாங்கல்யம் குலுங்க வாழ்ந்து கொண்டிருப்பாள்.


  அவளைப் பரிசோதித்த டாக்டர்கள் அனைவரும் ஏக மனதாக சொன்னது கல்யாணமாகிவிட்டால் இந்த நோய் மறைய வழி உண்டு என்பதுதான். ஆனால் அவளை யாரும் திருமணம் பண்ணிக் கொள்ள முன்வரவில்லை. 


  பணத்துக்காகவும் குலத்துக்காகவும் அவளைப் பார்த்து போகும்  மாப்பிள்ளைகள் சம்மதம் தெரிவித்து விட்டுப் போவார்கள்.  ஆனால் அவளுக்கு இருக்கிற அந்த நோய் பற்றிய வதந்தி எப்படியோ பரவி நிச்சயதார்த்தம் நின்றுவிடும்.


  தனக்கு கல்யாணமாகவில்லையே என்று ஜானகி வருந்துவதை விட ., அந்தப் பெரிய வீட்டில் பெற்ற தாய்க்கே பிடிக்காத, வேண்டாத சுமையாய் இருந்து தொலைகிறோமே என்பதுதான் அவளுடைய ஆற்றாமை. 


  “கழிசடை கழிசடை” ...  என்று அவளை ஒதுக்கி ஒதுக்கியே படிக்க வைக்கவில்லை.  இவள் படித்து என்னத்தைச் சாதிக்கப் போகிறாள் என்கிற அவநம்பிக்கை.  ஏழாம் வகுப்போடு படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. வடக்கேயிருந்து வந்து தங்கும் தமைக்கைமார், அவர்களுடைய குழந்தைகளுக்கும் ஊழியம் செய்யவே மாளாது.  வேட்டகம் புறப்படறேன் என்று ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே வடாம், அப்பளம், மோர் மிளகாய், பருப்பு பொடி, பச்சணம் என்று “கொஞ்சம் ஒத்தாசி செய்யடி ஜானா” என்று நைச்சியமாக பேசி பேசியே அவளை பிழிந்து  எடுப்பார்கள்.


  வீட்டில் தங்கி படிக்கும் ஒன்றுவிட்ட தம்பி மூர்த்திக்கும் அம்மாவுக்கும் வடக்கேயிருந்து துணிமணிகள் வாங்கி வருவாள் பாக்கியம். 


  “ஏண்டி,... எனக்கொண்ணும் கொண்டு வரலையா?” ஏக்கமும் எதிர்பார்ப்புமாக வினவும் அவளுக்கு கிடைக்கும் பதில் “உனக்கு எதுக்குடி இது?! வெளியே போய் வரவாளுக்குத்தான் இதெல்லாம் பாந்தமாயிருக்கும்.  வீட்டிலே கரியண்டை வேலை செய்றவளுக்கு தாங்குமா இதெல்லாம்? அதான் வாங்கியாரலை. கோவிச்சுக்காதடி ஜானா! அடுத்த முறை வரச்சே இதே போல துணி வாங்கியாறேன். “ஏண்டி ஜானா! இப்படி இளச்சுட்டே? உடம்பு துரும்பாய் போயிடுச்சேடி ஜானா, சும்மாத்தானே இருக்கே!  இந்தப் புடவையைக் கொஞ்சம் தோய்ச்சுப் போடறியாடி யம்மா” அவள் மோவாயை தடவுவாள் மூத்தவள்.


  எப்படித்தான் சுற்றிச் சுழன்றாலும் சக்கரத்துக்குள் இருக்கும் இருசு சுற்றினால் தான் சக்கரம் சுழலும் என்கிற ரீதியில் எதையெதையோ பேசினாலும் கடைசியில் அவளை பிழிந்து எடுப்பதில் தான் அக்காமார்களுக்கும் திருப்தி!.  வேலைக்காரி துவைக்க மாட்டாள் அவள் தொட்டால் “விழுப்பு”  “மடி” என்று ஒதுக்கி விடுவார்கள். 


  வரன் தேடி தேடி கலைத்துப் போய் விட்டனர் பெற்றோர். 


  ஜானகி....


அவள் என்றைக்கோ உணர்ச்சிகளை இழந்த வெறும் ஜடமாகிவிட்டாள்.  இதயம் வற்றிவிட்ட பின் உணர்ச்சிகளுக்கு இடமேது?


ஒருநாள்....


“ஏன்னா!  இப்படி செய்தாலென்ன? நாம நம்ம தரத்துக்கு ஏத்த மாதிரி பார்த்தா இந்த ஜென்மத்திலே  ஜானாவுக்கு கல்யாணமாகாது. குறையுள்ள பொண்ணுக்கு நெறஞ்ச மாப்பிள்ளை கிடைப்பானா? இதோ பாருங்க! பேசாம வேதம் மாமி பிள்ளை ராமுவுக்கே நம்ம ஜானாவை முடிச்சிட்டா என்ன?”


  “பாகீரதி நீ என்ன சொல்கிறே? வேதம் மாமியின் பிள்ளைக்கா! ஐயோ அவன் உருப்படாத பிள்ளைன்னு பேர் எடுத்தவனாச்சே! எங்கோ வெளியூர்ல வக்கீல் குமாஸ்தாவா பிழைச்சிட்டு இருக்கிறே அந்தப் பையனுக்கா ஜானாவை பண்ணலங்கிறே?” அதிர்ந்தார் அவர்.


  “அந்தப் பிள்ளை  உருப்படாதவனோ, உருப்படறவனோ எப்படியோ இருக்கட்டும்.  ஆனா அவன் ஒரு ஆண் பிள்ளை ஜானா கழுத்துல மூணு முடிச்சு போடுறவனா இருந்தா போறும். உடனே போய் வேதம் மாமியிடம் இது பத்தி பேசி முடிச்சுடுங்கோ”


  “பாகீரதி,  நம் ஆத்துக்கு வாசற்புறமா வர கூசிண்டு பின்புறமா வந்து ஒண்டி நிற்கிற வேதம் மாமியோட ஆத்துக்கு நானே நேரிலே  போறதா?”


  “பெண்ணைப் பெத்தவா குனிஞ்சுண்டு தான் போகணும். அதிலேயும் நிலைபடி குட்டையாயிருந்தா கேட்கவே வேண்டாம், புறப்படுங்க.”


  நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த பெரியதொரு பாரம் நீங்கிய நிம்மதிப் பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது.


  மூலையில் நத்தையாய் சுருண்டு முடங்கிக்கிடக்கும் தன் மாமியாரின்  உறக்கம் கெட்டு விடக்கூடாதே என்பதற்காக முட்டை விளக்கின் பின்புறம் அட்டையால் தடுத்தபடி அப்பளம் உருட்டி கொண்டிருந்தாள் ஜானகி. 


  தூக்கம் கண்களைச் சுழற்றியனாலும் அதை பொருட்படுத்தாதவாறு பரபரப்பாக வேளையில் ஈடுபட்டிருந்தாள் அவள்.  அந்த எட்டடிக்  குச்சில் அவளை சுற்றிலும் ஈரம் உலராத அப்பளங்கள் பரப்பிக் கிடந்தன.


  ஆயிற்று, அவளுக்கும் கல்யாணமாகி ஆண்டொன்று ஓடி விட்டது.  அவள் கணவன் ராம்முடு திருமணமான இரண்டு மாதங்கள் வரை ஒழுங்காக இருந்தான்.  பிறகு பழைய கதையாய் வீட்டில் கால் தரிக்காமல் வெளியூர் போய் விட்டான்.  தான் உண்டு உடுத்தியது போக எப்போதாவது பத்து, இருபது என்று அனுப்புவான் அதோடு சரி. 


  பெரிய இடத்தில் பிறந்து வளர்ந்த ஜானகி வரட்டு கௌரவம் பார்க்காமல் தன் விதிப்பயனை தான் அனுபவிக்க வேண்டும் என்று மாமியோடு தானும் உழைத்தாள். வேதம் மாமிக்கும் இப்போது உடம்பு முடியவில்லை.  எல்லா வேலைகளையும் ஒன்றியாகவே செய்து அந்த குடும்பத்தைப் பராமரிக்க தொடங்கினாள். 


  புரண்டு படுத்த வேதம் மாமி  விளக்கு வெளிச்சத்தை கண்டு திடுக்கிட்டாள். 


  “ஜானகி! என்னம்மா இது? இன்னும் நீ தூங்கல? படுத்து தூங்கும்மா,  எவ்வளவோ அமோகமா இருக்க வேண்டிய நீ, இந்த வீட்டுக்கு வந்து என்னோட சேர்ந்து நீயும் கஷ்டப்படறேயடியம்மா.” வேதனை கசிய மருமகளின் முகத்தை தடவி கொடுத்தது வேதம் மாமியின் கரம். 


  புரசைவாக்கத்தில் நெருக்கடி இல்லாத தெரு திருப்பத்தில் வேகத்தோடு வந்த கார் குலுக்களோடு நின்றது. 


  “ஏன்னா, அது நம்ம ஜானா மாதிரியில்லே? சித்தெ இருங்கோ.” காருக்குள்ளியிருந்த  பாகீரதி பதைப்போடு  எழுந்து வந்தாள். 


  கையில் பெரியதொரு பையோடு காரை  கடந்து போன அந்த பெண்ணை உற்று கவனித்தாள் பாகீரதி.


  “ஜானா! “


  அவள் ஜானகியேதான், திரும்பிப் பார்த்தவள் தாயைக் கண்டதும் உவகையோடு அருகில் வந்தாள்.


  மகளை ஏற இறங்கப் பார்த்தாள் அன்னை.  சாதாரண வாயில் புடவை, கைகளில் கண்ணாடி வளையல்கள், தாளிச் சரடோடு  உறவாடிக் கொண்டிருந்த மெல்லிய பொன் சங்கிலி, மெலிந்து இளைத்த மேனியிலும் ஒரு புது மெருகு. கன்னங்களில் பூசினாற்போல் சதைப்பற்று. 


  பாகீரதியின்  பார்வை சட்டென்று மகளின் இடுப்பருகே தாவிற்று. அதன் பொருளை உணர்ந்து கொண்டாற்போல் ஜானகியின் முகத்தில் நாணம் குமிழிட்டது . 


  “என்னடி, அப்படியா சமாச்சாரம்? ஏண்டி இத்தனை நாளும் என் கிட்ட சொல்லலே இதே ஊர்ல இருந்துட்டு முகத்தை காட்டாமல் இருக்கியேடி ஜானா.  உடம்பு இளைத்து போய் இப்படி இருக்கியேடிம்மா!  இந்த நேரத்துல உடம்பு நல்லா பார்த்துக்கணும் கார்ல ஏறு ஜானா! வீட்டுக்கு போகலாம்”.


  “இல்லம்மா, இப்ப நான் வர்றதுக்கு இல்ல அவரண்டே கேட்காம கிளம்ப மாட்டேன்”


“  என்னடி பெரிய அவரு, ராமுடு தானே? சொல்லிண்டா போச்சு வாடி!”


  “அம்மா என்ன சொன்னே நீ? பெரிய அவருன்னா? உன்னை பொறுத்த மட்டிலே டாக்டரும் இன்ஜினியருமா இருந்தாத்தான் நீ மருமகனா ஏத்துப்ப போலிருக்கு.  உன் பார்வையிலே அவர் அப்பளம் இடும் வேதம் மாமியோட உருப்படாத பிள்ளையாயிருக்கலாம்.  ஆனா.. எனக்கோ அவர் தாலி கட்டின புருஷன்.  நாலு பெண்களையும் துருவி துருவி பார்த்து நல்ல இடமா கொடுத்தே,  ஆனால்,  நான் கழிசடை, நோயாளின்னு ஒதுக்கி ஒதுக்கியே நாலு வேலைக்காரர்களுக்கு மத்தியிலே என்னையும் அஞ்சாவது வேலைக்காரியா நடத்தினே. சனி ஓழிஞ்சா சரின்னு நிலையான வேலையோ வருமானமோ இல்லாத ஒருத்தருக்கு தள்ளிட்டு இப்போ ஏளனமா பேசுற!”


  “இதோ பாருமா ! நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னு பரிபூரணமா இந்த வாழ்க்கையே எத்துண்டு இரவு பகலா உழைச்சு அந்த குடும்பத்தை நடத்தினேன். உருப்படாதவர்ன்னு பேரெடுத்த  என் கணவரைக்கூட என் பொறுமையாலே மாத்திட்டேன். வாழ்க்கையில  பிடிப்பில்லாம ஊர் ஊரா சுத்திண்டிருந்த அவருக்கும் நிலையானதோர் தொழிலை அமைச்சிட்டேன். இரவு பகலா கண் முழிச்சு அப்பளம் உருட்டியும், வற்றல் பிழிஞ்சும், ஊறுகாய் தயாரித்தும் நாலு பேருக்கு தெரியாம மூடி மூடி வேற்று மனிதர்கள் இருக்கிற இடத்தில் நாலு பெரிய இடங்களில் வாடிக்கையாய் போட்டு பணம் சேர்த்து டைப்மிஷின் வாங்கி செஷன் கோர்ட் ஏரியாவில் ஜாப் டைப்பிஸ்ட்டாக அவரை சுயமா சம்பாதிக்க வழி செஞ்சிட்டேன்.”


“நீ நினைச்ச மாதிரி நான் கழிசடையாய் போகலே, இப்போது சௌக்கியமாகத் தான் இருக்கேன்.”


  “உண்மையைச் சொல்லப்போனா எனக்கு முன்னே மாதிரி இப்போ அந்த “வலிப்பும்” வரதில்லே.  என் உடம்பை தேத்ததற்காக நான் அங்கே வர வேண்டியதில்லை. ஏன் ? தலைப் பிரசவத்துக்குக் கூட அங்கே வர்றதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்”.


  “அம்மா ஒரு சின்னத் தணல்  உன் காலை சுட்டுடுத்தேன்னு நீ அதை தெருவிலே  விட்டெறிஞ்சே. ஆனா...அதை ஊதி ஊதி அந்த ஜ்வாலையிலிருந்து விளக்கேத்தி ஓர் இருண்ட வீட்டுக்கு வெளிச்சம் கொடுக்க முடியும்ங்கிறதை நான் நிரூபிச்சிட்டேன்.  நான் வர்றேன்.”


  நிதானமாக, ஆனால் அழுத்தத்தோடு பேசி முடித்துவிட்டு கூட்டத்தில் சென்று மறையும் மகளைக் கண்டு கண்ணீர் வடித்தாள் பாகீரதி.


  அது ஆனந்த கண்ணீர்.

 ஆனந்த விகடன் 10.01.1971 ல் வெளிவந்தது.)


           எழுதியவர்

மறைந்த எழுத்தாளர்

கே. ஜெய்புன்னிசா.


No comments:

Post a Comment