விடியலை நோக்கி சில விழிகள் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா - Appu Movies

Monday, July 6, 2026

விடியலை நோக்கி சில விழிகள் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா


 விளக்கேற்றும் நேரம்! 


  மெல்ல மெல்ல இருள் கவிந்து கொண்டிருந்த அந்திப்பொழுது. 


  சில்லென்ற காற்றோடு ஊசி முனியாய் மழைத்துளிகள் முற்றத்தில் தெறித்து விழுந்தன. 


  புகை படிந்த சிம்மினி விளக்குகளை துடைத்து விளக்கேற்றினாள் ஜானா. கூடமும் பூஜை அறையும் விளக்கொளியும் புதுக்கோலம் பூண்டன.


  அடுக்களையில் கை காரியமாய் இருந்த மூத்தவள் வேதா ஊதுவத்திகளை கொளுத்தி வந்து பூஜை அறையில் வைத்தாள். 


  அந்த மழை நேரத்தில் கூட இரண்டாம் முறையாக சில்லென்ற கிணற்று நீரில் நீராடி விட்டு வந்த அலமு, பூஜை அறை என்ற பெயரில் இருந்த அந்த இருண்ட சாமி உள்ளின் முன் விழி மூடி கரங்குவித்து நின்றாள்.


  கணிரென்ற  குரலில் துல்லியமாய் லயத்தோடு மகாலட்சுமி அஷ்டகத்தை ஜபித்துக் கொண்டிருந்தன அலமுவின் உதடுகள்.


“நமஸ்தோஸ்து மகாமாயே.....”


சூதானமாக இழைந்து வந்தது நாதம். 


  நீண்ட நேரம் கரங்குவித்து வணங்கி நின்ற அலமுவின் விழியோரங்களிலிருந்து நீர் முத்துக்கள் உருண்டன.


  அம்மன் குங்குமத்தை எடுத்து பத்தி சிரத்தையோடு நெற்றிக்கு இட்டுக் கொண்டவள், சிறிதை மாங்கல்யத்திலும் வைத்து அதனை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.


  கூடத்தில் முட்டை விளக்கின்  மங்கிய ஒளியில் அப்பளம் இட்டுக் கொண்டிருந்த பெரிய மகள் வேதாவை பார்த்ததும் அவள் இதயம் பெருமூச் செறிந்தது. இதயத்தின் ஜீவ நரம்பை சுண்டி விடுவது போல் ஒரு வேதனை மின்சாரமாய் பாய அம்மாவும் மகளுக்கு உதவியாய் அப்பளம் விடத் தொடங்கினாள். 


  “ஜானா எங்கடி?” வேதாவிடம் கேட்டாள் தாய் அலமு.


  “நம்மாத்துக் கொள்ளையிலே வெண்டையும், கத்திரியும் அமோகமா காய்ச்சதோன்னோ ?  ஆத்துக்கு போக மீந்தது வாடறத்துக்கு முன்னாடி வித்துபுடலாம்னு பங்கஜம் மாமிகிட்டே எடுத்துண்டு போனா.. வர்ற நேரம்தான்!”


“நீயும் தான் நெதமும் அப்பளத்துக்கு இடிச்சு, உழைச்சு, ஓடாத் தேயறே! ஜானாவோ பொழுது விடிஞ்சு போனா கொல்லையே கதின்னு கெடக்கறா.  கொத்தறதும், ஜலம் இழுத்து கொட்டறதும்ன்னு ஒவ்வொரு பூவும் பிஞ்சுமா மொட்டு விடறதைப் பார்த்து பாத்து வளர்த்து அப்பப்போ காசாக்கறா.   என்னதான் நீங்க ரெண்டு பேரும் ஓடாத்தேய்ஞ்சு மாஞ்சு போனாலும் நம்ம தரித்திரம் விடியறதைக் காணும்?  பொட்டக்கோழி கூவியா பொழுது விடிய போறது?”


  “எதுக்கும் அந்தக் கடவுள் அனுகிரக வேணும்டி.  இந்த பிராமணரோ எதையும் கண்டுக்காத தோத்திரம், பூஜை புனஸ்காரம்ன்னு  காலத்தை ஓட்டிண்டிருக்கார்.”


  மனப்புழக்கம் புலம்பலாய் வெடிக்க கொட்டி தீர்த்தாள் அலமு.


  “இதோ ஆச்சு...  தூறலோ, மழையோ, எதுவானா என்ன? உழைக்கும் கைகள் ஓய்வெடுக்கவா முடியும்? அரை மணி நேரத்துக்குள் கோரைப்பாயில் அப்பளங்கள் பச்சை மணம் வீச பூத்துப் பெருகின.


  ஈர காற்றின் குளிர்ச்சியோடு பச்சையப்பளத்தின் மனம் அந்த இரவு பொழுதில் நாசிக்கு இதமான வாசனையை வாரி தெளித்தது. 


  “அலமு இலை போடறியாடி?”


  “வாசத் திண்ணையிலிருந்த மண் முடாவிலிருந்து நீரை மொண்டு கை கால் அலம்பி கொண்டு வந்த குருக்கள் மனை பலகையில் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.


  “எல்லாமாச்சு. இதோ வந்துண்டே இருக்கேனா!?”


  அவரது இலையில் கல் சட்டியில் இருந்த பழையதை பிழிந்து போட்டு கடைந்த மோரை விட்டு மாவடுவை வைத்தாள். 


  “இன்னிக்கு தளிகை இல்லையாடி” என்று கேட்டவாறு சாதத்தை பிசைந்து ஒரு வாய் போட்டுக் கொண்டே...


“என்னதான் சொல்லு, அந்த மாவடுவோட ருசிக்கு ஈடு வேறேதும் இல்லை....!” ரசித்து உண்டவாறே அலமுவைப் பார்த்து புன்னகைத்தார் குருக்கள்.


  “மாவடுவையே ரசிச்சிண்டிருங்கோ! மாமரம் போல தலைக்கு மேல வளந்து நிக்கிற ஜானா, அவளை பத்தின கவலை ராப்பகலா என் நெஞ்ச எரிச்சுண்டிருக்கு.  அந்த மாயவரத்து பிள்ளையாண்டானோட ஜாதகம் நல்லா பொருந்தி இருக்கு. அவளுக்கும் நம்ம ஜானாவை பிடிச்சு போச்சு.  மேற்கொண்டு அவா கேக்கற சீர்வரிசையை எப்பாடுப் பட்டாவது செஞ்சுட்டோம்னா போறும்.  ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் நடந்திடும்.  பகவானே! எப்படியாவது ஜானா கழுத்துல சீக்கிரமா தாலி ஏறணும்...” அலமு கண்களை மூடி ஜெபித்தாள்.


  சாப்பிடுவதை நிறுத்திவிட்டு கட கடவென்று சிரித்தார் குருக்கள். 


“உனக்கு என்னடி பைத்தியமா? அவ கேக்கற சீர்வரிசையை இந்த ஜென்மத்துல நம்மால செய்ய முடியுமாடி! நான் என்ன கலெக்டர் உத்தியோகமா பாக்கறேன்.  ஏழை குருக்கள்டி இதுவோ நாட்டுப்புறம்.  மாசாமாசம் இருநூறு ரூபா கிடைப்பதே நம்ம அதிர்ஷ்டம். நாள் கிழமைகள்ல்லே தட்ல விழற  சில்லறை காசுகள் தான் விறகுக்கும், உப்பு புளிக்கும் உதவுவது என்கிறதை மறந்துடாதே.  ஏதோ கோயில்லே குடியிருக்க வீடு கொடுத்தாலே பொழைச்சோம். கொல்லையிலே காய்கிற காய்கறிகள் விக்கிற காசு தீபாவளிக்கு நாமும் புது துணி கட்டிக்க ஓதவுது.   இந்த லட்சணத்தில புக்காத்துக்குப் போன வேதாவை, அவ புருஷன் வேறொருத்தியைச் சேர்த்துண்டு நம்மாத்துக்கே திருப்பியனுப்பிட்டான்.  நம்ம குழந்தை நமக்கு சுமையாயிடுமா? எல்லாம் காலக் கோளாறு.  இந்த லட்சணத்திலே பெரிய இடத்துலே கொடுக்க ஆசைப்படறே.  எல்லாத்தாயும் படற நியாயமான ஆசைதான்! ஆனா நமக்கு வசதி வேண்டாமாடி? நெனச்சுப்பாரு” நிதானமாக பேசினார் குருக்கள்.


  “அப்படியொண்ணும் அதிகமா கேட்டுடலையே ஆவா? கையிலே கொஞ்சம் ரொக்கம். அஞ்சு சவரன்லே ஒரு ரெட்டை வடம் சங்கிலி போட்டு, காது மூக்க மூடினா போறும்னா.  நாலு எவர்சில்வர் பாத்திரம், வெள்ளி குங்குமச்சிமிழ் இவ்ளோதான்.  இந்த கிராமத்துலே நம்ம அம்பாள் சன்னதியில் கல்யாணம்.  ஒரு நூறு பேருக்கு சாப்பாடு இது செய்ய முடிஞ்சா போறும்.  நம்ம ஜானா கல்யாணம் ஜாம் ஜாம்முன்னு நடக்கும்!” 


  “ஏண்டி இப்படி பொலம்பின்டே இருக்கே ? மரம் வெச்சவன் தண்ணி ஊத்துவான்.  எல்லா பாரத்தையும் பகவான் கிட்ட இறக்கி வச்சிட்டு சிவனேனு இரேண்டி.”


  எந்த ஒரு பாதிப்பும் தன்னை அணுகாத நிச்சலமான  நிலையில் முற்றத்தில் துண்டை விரித்துப் படுத்துவிட்டார் குருக்கள்.


  அவரை துரத்திக் கொண்டே அங்கு வந்த தூணில் முதுகை சாய்ந்து அமர்ந்தாள் அலமு. 


  அவரிடம் புலம்பித் தீர்ப்பதிலும் ஒரு சுகானுபவம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.  இறுக்கமாக சிக்கி, விழுந்த முடிச்சு தளர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விரிவதுபோல் நெஞ்சை இடைவிடாமல் அறுத்துக் கொண்டிருக்கும் சுமைகளும் கவலைகளையும் கணவனிடம் வாய் திறந்து புலம்பும்போது விலகுவது போலிருந்தது.


  “லோகத்திலே பிள்ளையைப் பெத்தவா எல்லோரும் கிடைச்சவரை ஆதாயம்ன்னு  கறக்க தான் பார்ப்பான். இது உலக சம்பரதாயம் அதுக்கு சம்மதம்னா எப்படியாவது சீர்வரிசை கொடுத்து பொண்ணை கரையேத்தணும்.  பிள்ளையாண்டான் கை நிறைய சம்பாதிக்கிறச்சே பொண்ணு தானே அனுபவிப்பா. அப்போ சந்தோஷப்படற நாம இப்ப சிரமப்பட தான் வேணும். “


  பெருமூச்சு விட்டவாறு யோசனையிலாழ்ந்தார் குருக்கள். 


  “அவ கேட்கிற சீர்வரிசைக்கு ரொக்கத்திற்கும் நமக்குன்னு மிச்சம் இருக்கிற மஞ்ச காணி நிலத்தை வித்தா கூட போதாதே என்னடி பண்றது?”.


  “புள்ளையாண்டான் மத்திய அரசாங்கத்திலே உத்தியோகத்தில் இருக்கான் இந்த வரைக்கும் அவா பெருசா வைர மூக்குத்தி போடுன்னு சொல்லாம நம்ம குடும்ப பாரம்பரியத்தை அனுசரிச்சு இந்த ஏழை குருக்களாத்துக்கு பெண் பார்க்க வந்தது பெரிய விஷயம். “


  “நாம் என்ன யோசிச்சு என்னடி பண்ண ? வேலை வந்துடுத்துன்னா எல்லாம் நல்லபடி நடக்கும்....”


  “ஏன்னா நிஜமாத்தான் சொல்றேளா? நம்ம ஜானாவுக்கும் கல்யாணம் நடக்கும்ன்னு சொல்றேளா?”


  கண்களில் மின்னலாய் ஒளி பூச்சு தவிக்கும் தாய் உள்ளத்தில் துடிப்போடு வினவினாள் அலமு.


  நெஞ்சில் நம்பிக்கை பூ ஒன்று மெல்ல மெல்ல வளர தொடங்கியது. 


  நித்திய காலமும் பக்தி நெறியிலே ஆசாரத்தோடு வாழ்க்கையை ஒரு தவம் போல் நடத்தி வரும் குருக்களுக்கு அடுத்தடுத்து பிறந்த இரண்டும் பெண்கள் மூன்றாவதாக பிறந்தவன் விஸ்வம். 


  மூத்தவள் வேதாவை தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் சுந்தரராமனுக்கு தன் சக்திக்கு மீறியே செலவு செய்து கல்யாணம் செய்து கொடுத்தார்.  ஆனால் ஓராண்டுக்குள்ளாக கணவன் தன்னை ஒதுக்கி விட்டு வேறொருத்தையோட சுற்றுவதை கண்டு மனம் பொறுக்காமல் பிறந்தகத்திற்கு திரும்பிவிட்டாள் வேதா.


  மகளை வாழ வைக்கும் முயற்சியில் மாப்பிள்ளையிடம் அவர் மன்றாடி தோற்று மனமுடைந்து போனார்.


  அப்படி ஒரு அவமானத்திற்கு பின் தன்  தலைவிதியை நொந்து கொண்டு பெற்றோருக்கு சுமையாக இல்லாமல் அப்பளமிட்டு தன்னால் முடிந்தவரை உதவினால் வேதா.


  இரண்டாவது பெண் ஜானாவின் கல்யாணம்தான் பிரச்சனையாக இருந்தது. நல்ல வரன் ஆனால் அவரால் மஞ்சக் காணியை விற்று கடன் வாங்கினாலும் போதாத இழுப்பறி நிலை. 


  ஒரே பிள்ளை விசுவம் படித்துவிட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். தந்தைக்கு உதவியாய் கோயில் கைக்கரியங்களில் ஒத்தாசை பண்ணினாலும் ஏனோ தந்தையின் பரம்பரைத்  தொழிலில்  ஈடுபட விரும்பவில்லை அவன்.


  கோவில் பூஜை நெய்வேதியம் என்ற காலமெல்லாம் ஆச்சாரமும் பக்தியமாய் நியமங்களை தன் தந்தை கடைப்பிடிக்கும் அன்றாட தரித்திரம் விலகாத விரக்தியில் அவள் உள்ளம் தந்தையின் நிழல் வட்டத்தை விட்டு விலகி வேறு வேலை தேடி கை நிறைய சம்பாதிக்க வேண்டுமென்று கனவு கோலம் பூண்டது.


  அம்மாவுக்கு,  தன் ஒரே பிள்ளையும் தந்தை வழியில் பரம்பரை தொழிலில் இறங்கி பட்டினி கிடக்காமல் சுயமாய் வேறு உத்தியோகம் தேட முனைந்ததில் ஒரு விதத்தில் ஆறுதல் தான். !


  கிடைக்கும் சொற்ப வருமானத்தில் உப்புக்கும் புளிக்கும் கணக்கு பார்த்து பைசா பைசாவாக செலவு செய்யும் அன்றாட தரித்திரம்! மற்றவர்கள் மாதக் கடைசியில் கணக்கு பார்த்தால் இங்கே அன்றாடமும் பற்றாக்குறை பாட்டுதான், பொழுது விடிந்தால் ஒரு வாய் காப்பிக்கும் நீர்த்த மோர் சாதத்திற்குமே இழுபறியாய் அவள் படுகிற பாடு அவளுக்குதானே தெரியும். 


  பெண்கள் அதிகப்படியா ஒரு புடவைக்கும் சினிமாவுக்கும் ஆசைப்பட்டால் கூட நிறைவேற்ற முடியாத இயலாமை கடந்த 25 வருடமாய் மாறுதலே இல்லாத அதே வருமானம்.  “போராடித்தான் பாரேன் உன்னால் என்னை வெல்ல முடியுமானு பயமுறுத்தும் விலைவாசிகள், இவைகளுக்கிடையே அல்லற்படும் வாழ்க்கை. 


  இருட்டு குகைக்குள்ளேயே கிடந்து பார்வையே மங்கி விட்ட நிலையில் வெளிச்சத்திற்கு வர மாட்டோமாவென ஏங்கும் ஏக்கம்.


  இயற்கை தானே? 


  பெண்களின் சுமையை தாங்க மகன் மூலமாவது தன் குடும்பத்திற்கு விடிவு பிறக்கும் என்று அலமு நம்பியது நியாயமே!


  கொல்லையில் நந்தவனம்மாய் பூத்துக் குலுங்கிய மல்லிகை அரும்புகளை கோய்ந்து துரிதகதியில்  சரமாய்த் தொடுத்துக் கொண்டிருந்தாள் வேதா.


நாலு மணிக்குள் தொடுத்து முடித்தால்தான் கோவில் சந்நிதி வாசல் பூக்கடைக்காரரிடம் மொத்தமாக விற்க முடியும். பொழுது சாய்ந்து விட்டால் பூ மீந்து விடுமென்று வாங்க மாட்டார்.


  பரபரப்பும், அவசரமுமாய் தொடுத்து முடிந்த பூச்சரத்தை குடலையில் வைத்து எடுத்துக்கொண்டு கிளம்புகிற சமயம் கச்சேரியாத்து கோமதி மாமி எதிர்பட்டாள்.


  “வாங்கோ மாமி”


  “ஏண்டிம்மா வேதா,  எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை பண்ணுவியாடி கொழந்தே...’


  சுற்றி வளைக்காமல் மாமி கேட்டது அவளுக்கு பிடித்திருந்தது.


  “சொல்லுங்க மாமி என்ன செய்யணும்?”


   “கொழந்தே! நாளை மறுநாள் ராத்திரி வண்டிக்கு வைதேகி புக்காத்துக்கு புறப்படறா! அன்னைக்கு தான் நாள் நல்லா இருக்காம். புக்காதுக்கு போறவளுக்கு கொடுத்துனுப்ப கொஞ்சம்  பட்சணம், முறுக்கு எல்லாம் பண்ணி முடிச்சிட்டேன் இன்னும் கொஞ்சம் போல பருப்பு பொடி, இட்லி மிளகாய் பொடி, இடிக்கணும் என்னதான் மிக்ஸி அது இதுன்னு இருந்தாலும் கை சுத்தமா கல் உரல்ல இடிக்கிற பொடிக்கு அலாதி ருசி தான். நீ ஒரு கை ஒத்தாசை பண்ணுனியானா தேவலாம். அதான் கைக்காரியத்தை கூட அப்படியே போட்டுட்டு ஓடியாந்தேன்.”


  மாமிக்கு மூச்சு வாங்கியது பாவம் ஸ்தூல சரீரம். 


  “அதுக்கென்ன மாமி திவ்யமா வரேன்.  ஒரு நொடியிலே இந்த புஷ்பத்தை சந்நிதிக் கடையிலே கொடுத்துட்டு வந்துடறேன்.” என்றவாறே வெளியேறவும் தம்பி விஸ்வம் உள்ளே  நுழையவும் சரியாய் இருந்தது. காலையில் ஏதோ இன்டர்வியூ என்ற கிளம்பியவன் இப்போதுதான் திரும்புகிறான்.


  மாமி வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு அவள் கொடுத்த பத்து ரூபாய் பணத்தோடும் களைப்போடும் வீடு திரும்பிய அவளை எதிர்கொண்டு காத்திருந்தான் தம்பி விசுவம்.


“ ஏண்டா போன காரியம் பழம் தானே?” ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.


  அவன் முகத்தில் திடீரென ஒரு மாற்றம். 


  “அக்கா வேலை கிடக்கட்டும். ஒரு விஷயம்” என்றான் படபடப்பாய்.


  “என்ன விஸ்வம்”


  “டவுனுக்கு பஸ்ஸிலே போறச்சே அத்திம்பேரை பார்த்தேன்”.


  “அப்படியா”


  “கூட அவளை காணோம். அத்திம்பேர் என்னை கண்டும் காணாத மாதிரி போயிடுவாருன்னு நெனச்சேன். ஆனா நான் இறங்கி நடக்கிறச்சே அவரும் பின்னாடியே வந்து அழைச்சார். அதுக்கப்புறம் எப்படியக்கா நான் வீம்பா போகமுடியும்.?”


  “ஏதேனும் கேட்டாரா ?”அவள் விழிகளில் ஈர பளபளப்பு.


  “கேட்டார் ! வேதா எப்படி இருக்கா, அவளை நானே வந்து பார்க்கிறேன்னு சொல்லுன்னார்.  இந்த வரைக்கும் அவர் திருந்தி இறங்கி வந்தது ஏதோ சொப்பனம் கண்ட மாதிரி இருந்தது நேக்கு”.


  “விஸ்வம்... அவர் உடம்புக்கு ஒன்னுமில்லாம  சௌக்கியமா இருக்காரோன்னோ? அவர் நல்லா இருந்தா போறும்.!” கண்களை துடைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள் வேதா.


  இன்னும் இருள் பிரியாத வைகறைப்பொழுது. 


  கொல்லைக் கிணற்றில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு ஈரம் சொட்டும் மடிவேட்டியையும் துண்டையும் உடுத்திக் கொண்டு நெற்றியில் திருநீறும் குங்குமமும் துலங்க அந்த இருட்டில் கோயிலை நோக்கி நடந்தார் குருக்கள். 


  “பூஜையை முடிச்சுண்டு சுருக்க திரும்பிடுங்கோ.  அதுக்குள்ள தளிகையை முடிச்சுடறேன். உங்களுக்கு பிடிச்ச முருங்கக்காய் சாம்பார் வைக்கறேன்.  வந்து ஒரு விஷயம்..”


  “என்னடி தயக்கம் சொல்லேண்டி”


  “வந்து இன்னைக்கு மனசே சரியில்லே! ராத்திரி முழுக்க ஏதேதோ கெட்ட சொப்பனம் கண்டேன்.  நீங்க சுருக்க வந்துடுங்க...”


  “இத்தனை நாளும் இல்லாத இப்ப நோக்கென்ன  வந்தது?” கலகலவென்று சிரித்தவாறே வாயிற்படியில் கால் வைத்தார் குருக்கள்.


  “ணங்” கென்று  நிலைப்படியில் என்றுமல்லாமல் தலை இடிக்கவே, சற்று நேரம் வாசல் குறட்டில் உட்கார்ந்தார் குருக்கள். “அலமு... தூத்தம் கொண்டா!” தண்ணீரை ரெண்டு வாய் குடித்துவிட்டுப் புறப்பட்டார்.


  அவள் படியிறங்கி செல்லும் வரை இமைக்காமல் வெறித்துக் கொண்டு நின்ற அலமு  கொல்லைப்புறம் விரைந்து மறுபடியும் வாளி வாளியாய்  ஜலம் இரைத்து தலையில் கொட்டிக் கொண்டாள்.


  ரவிக்கையும் புடவையும் சொட்ட சொட்ட அப்படியே பூஜையறையில் கரங்குவித்து  கண்மூடி நின்றாள்.


  பூஜை அறையில் இருந்து அலமேலுவின் குரல் குறைந்து இழைந்து வந்தது. 


“மங்கள ரூபிணி மதியனி... சூலனி மன்மத பாணியாளே! சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே....!” 


  கிணற்றிலிருந்து முருங்கைக்காய் பறித்து வந்த ஜானா தாயின் குரலில் இருந்த தழதழப்பை கண்டு விக்கித்து நின்றாள்.


  அவள் மேனி சிலிர்த்தது. 


  “அக்கா என்ன இது ? அம்மா சொல்ற தோத்திரத்தை கவனிச்சியாடி, துக்க நிவாரண  அஷ்டகத்தையான்னா சொல்றா?”


  “ஆமாண்டி காலம்பற எழுந்திருக்கச்சயே அம்மா ஒரு மாதிரியான்னா இருந்தா?”


  சகோதரிகள் இருவரும் திகிலோடு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 


  பூஜையை முடித்துக் கொண்டு திரும்பிய அலமுவின் முகம் ஏனோ இறுகியிருந்தது.


  “வேதா... கெட்ட சொப்பனம் கண்டேன்.  மனசு என்னவோ பண்றதுடி.  அதான் துக்க நிவாரண அஷ்டகத்தை சொன்னேன் கடவுள் இருக்கார்.”


  தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டாள் அலமு. 


  கோயில் கர்ப்ப கிரகத்தை நெருங்கும்போது தூக்கி வாரி போட்டது. 


ஏற்கனவே கதவை திறக்கப்பட்டு இருந்தது உள்ளே ஆட்களின் நடமாட்டம்! 


சாவி அவர் கையில் இருக்கும் போது இது எப்படி? 


அவரால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை. 


இருளோடு இருளாக பதுங்கி சென்று கண் இமைக்கும் நொடிப்பொழுதில் கர்ப்ப கிரகத்தின் திறந்திருந்த கதவை இழுத்து மூடி அதில் வாய் திறந்து தொங்கிக் கொண்டிருந்த பெரிய பூட்டை கையில் இருந்த சாவியால் டக்கென்று பூட்டி முடிக்கும் தருணம்....


பின்புறம் காவலிருந்த கொள்ளையரின் கையால் மின்னல் வேகத்தில் அவரை தாக்க குருக்கள் அலற அந்த வைகறை பொழுதில் அந்த குரலைக் கேட்டு கிராமம் மொத்தமும் ஓடி வர ஏக களாபரம் ஒரு சில நிமிடங்களில் நிகழ்ந்துவிட்டது. 


  அம்பாள் நகையை கொள்ளையிட்டு கொண்டிருந்த கொள்ளை கூட்டம் எலிப் பொறியில் அகப்பட்ட எலிகளாய் வகையாய் மாட்டிக் கொண்டது. 


போலீசார் மண்டகப் பூசையோடு அவர்களை இழுத்துச் சென்றனர். 


குருக்களுக்கு தலையிலும் கையிலும் ஏற்பட்ட காயங்களின் வேதனை கூட பெரிதாக தெரியவில்லை ஊராரின் பாராட்டும் புகழுரையும் அவரை தலை நிமிர்ந்து நடக்க வைத்தன. 


  சில வாரங்களில் அவரது ரத்த காயங்கள் ஆறிய அதே நேரம் அரசாங்கத்திலிருந்து அவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது என்ற நற்செய்தி அவரை தேடி வந்தது. 


  உயிரையும் பொருட்படுத்தாமல் சமயோசித புத்தியுடன் கொள்ளையர்களை பிடித்து கொடுத்த அவரது செயலை பாராட்டி மேல்மட்ட காவல்துறை அதிகாரியவர்கள் அரசாங்கம் அளித்த இருபதாயிரம் ரூபாய்கான காசோலையை குருக்களிடம்  ஊர் மக்கள் முன்னிலையில் கொடுத்து அவரை பாராட்டி பேசினார். 


அலமுவுக்கு முகமே தாமரையாய் மலர்ந்தது. 


  ஜானாவின் கல்யாணத்திற்கு துண்டு விழுந்த தொகையை இந்த பணத்திலிருந்து எடுத்து அவள் திருமணம் ஜாம் ஜாமென்று நடந்தது. 


  விஸ்வத்தின் வேலைக்காக டெபாசிட் தொகை கொடுக்கப்பட்டு இன்று அவனும் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து விட்டான். 


  மூத்தவள் வேதாவை அவள் கணவன் வந்து அழைத்து போய்விட்டார். 


ஆக.....


அந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை பொழுது மட்டும் விடியவில்லை பிரச்சனைகளுக்கும் விடிவு ஏற்பட்டு விட்டது. 


நம்பிக்கைதானே வாழ்க்கை? 

எழுதியவர்

கே. ஜெய்புன்னிசா.

    ராஜம் – பிப்ரவரி 1989 வெளிவந்தது.

                            **********


  


No comments:

Post a Comment