பஸ்ஸை விட்டிறங்கி கிராமத்தை நோக்கி நடந்தேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின் தான் பிறந்து வளர்ந்த ஓடி விளையாடிய சொந்த மண்ணை மிதித்தபோது என் உடம்பு சிலிர்த்தது. சந்தன மணத்தை முகர்ந்தாற்போல் என் மேனியெங்கும் புல்லரித்தது.
சொந்த மண்ணை மிதித்ததுமே பழைய நினைவுகள் ஓடி வந்து சிறு குழந்தையா என்னை அணைத்துக் கொண்டன.
ஊர் ரொம்பவும் மாறி இருந்தது.
இந்த நீண்ட பத்தாண்டு கால இடைவெளியில் அடையாளம் தெரியாதபடி எல்லாமே மாறி போயிருந்தன.
ரயிலடிக்கு எதிரே கண்ணுக் கெட்டியவரை பரந்து விரிந்து கிடக்கும் அந்த வெட்டவெளியைக் காணோம்!.
சின்ன வயதில் அங்கே தான் நானும் அருணாச்சலமும் கால்பந்து ஆடுவோம். ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அங்கே நண்பர்கள் குழாம் கூடிவிடும்.
இருட்டும்வறை வேர்க்க விறுவிறுக்க விளையாடிவிட்டு திரும்பும் வழியில் ஆற்றில் களைப்புத்தீர நீந்தி குளித்துவிட்டு வேர்வை நாற்றமடிக்கும் மேல் சட்டையை தோய்த்து பிழிந்து ஈர உடம்பில் போட்டுக் கொண்டு மெல்ல நடந்து ஆத்துக்கு போய் சேர்வதற்குள் சட்டை உலர்ந்து விடும்.
கிராமம் முழுதும் நிழல் பரப்பிக் கொண்டு நிற்கும் வேப்ப மரங்களும், புன்னை மரங்களும், பூவரச மரங்களும் போட்டி போட்டுக் கண்டு வீசும் சுகந்தமான காட்டில் ஈர உடைகள் உலர்ந்து விடும்!
வழியிலுள்ள சீனிப் புளியங்காய் மரங்களில் கொத்துக்கொத்தாக தொங்கும் சினைக் காய்களை பறித்து வழி நெடுக உரித்து தின்று கொண்டே செல்லும் சுகமே அலாதி தான்!
ஆனால் இன்று...
ரயிலடிக்கெதிரே விரிந்து கிடந்த பொட்டல் வெளியைக் காணோம். வரிசையாக ஓட்டுவில்லை வீடுகள் அணிவகுத்து நின்றன. பாதையோரம் மூங்கில் தட்டி தடுப்பினால் மறைக்கப்பட்டு நடந்து வந்த கிச்சாமி ஐயரின் காப்பி கடையை காணோம். அவரது கையால் பரிமாறப்படும் மல்லி பூ போன்ற இட்லியும் தக்காளி கொத்ச்சும் நாவில் நீரை வரவழைத்தன. கமகமக்கும் கள்ளிச்சொட்டுப் போன்ற காப்பியின் ருசியே அலாதி தான்.
காலையில் ஆத்து சாப்பாட்டை உதறிவிட்டு கிச்சாமி கடை இட்லி கொத்சுக்காக பறந்தடித்துக்கொண்டு முதல் ஆளாக மர பெஞ்சில் இடம் பிடித்தது இன்னும் மறக்கவில்லை.
அந்த நாட்களை மறக்கத்தான் முடியுமா?
கிச்சாமி காப்பி கடை இப்போது பெரிய அளவில் கட்டிடமாக காட்சியளித்தது. கிருஷ்ணா பவன் என்ற பெயர் பலகை பெரிய எழுத்துக்களில் அட்டகாசமாக தெரிந்தது.
நவ நாகரிகமான முறையில் ஹோட்டல் மாறியிருந்தது. பளபளக்கும் மேஜை நாற்காலிகள் தலைக்கு மேல் சூழலும் காற்றாடி, முதலாளியின் அருகே பக்தி பாடல்களைப் பாடும் டேப் ரெக்கார்டர், அலங்கார விளக்கு இத்தியாதி...
எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாதது போல சூனியமாகவே எனக்கு தெரிந்தது.
“வாங்கோ... வாங்கோ.. சூடா பூப் போல இட்லி இருக்கு... கூடவே தக்காளி கொத்ஸ்..
“ என்று நெற்றி நிறைய திருநீரும் வாய் நிறைய சிரிப்புமாக வரவேற்கும் கிச்சாமி மாமாவை காணோம், அதுதான் சூனியமோ?.
கல்லாவில் அமர்ந்திருந்த இளைஞருக்கு 32 வயது இருக்கலாம். நல்ல சிவப்பு நிறம் போஷாக்கான உணவினால் வளர்ந்த செழிப்பு, உடம்பில் தெரிந்தது, நெற்றியில் திருநீரோடு குங்குமமும் இட்டிருந்தார்.
மெல்ல அவரை நெருங்கினேன்.
“இங்க கிச்சாமின்னு காபி கடை நடத்திண்டு இருந்தாரே ஒரு மாமா... நல்ல சேகப்பா... அவர காணோமே” கேட்ட என்னை தீர்க்கமாக பார்த்தார் அந்த இளைஞர்.
“நீங்க அசலூரா?”
“ஆமாம் ரொம்ப நாளா வடக்கேயே தங்கி விட்டேன்...” இவருக்கெப்படி தெரிந்தது?”
“அதான்! அவரை நீங்க பார்க்க முடியாதே...”
“ஏன் வெளியூர் போயிட்டாரா?”
“இல்லே ! லோகத்தை விட்டே போயிட்டார். இது அவர் கட்டின ஹோட்டல் தான். போர்டு பாக்கலையா நீர். அவர் பிள்ளையாண்டான் நான் தான். இப்ப இதை நடத்திண்டு வரேன். உன்னை எங்கேயோ பார்த்தாப்பல இருக்கே?” என்ற அந்த இளைஞரே நான் வியப்புடன் பார்த்தேன்.
“நான் தான் ரவிசங்கர்! நீ...நீ சுப்புடு இல்லே ? ரொம்பவும் வளர்ந்துட்டியே! நாம ஒண்ணா சேர்ந்து இந்த கிராமத்துல மாந்தோப்பையே ஒரு கலக்கு கலக்கி இருக்கோமே. தோப்புக்காரன் விரட்டிண்டு வரச்சே கல்த்தடிக்கி நீ விழுந்து நெத்தியிலே இரத்தத்தோட ஓடின ஓட்டம்... இதோ அந்த தழும்பு அப்படியே இருக்கே” நான் படபடப்பாக பேசினேன்.
“டேய் ரவி நீயாடா? பார்த்து எத்தன மாமாங்கமாச்சு? நன்னா இருக்கியா? ஒக்காரு. என்ன சாப்பிடறே? ஸ்வீட் சாப்பிடு!” என்று ஆனந்த பெருமிதத்தோடு கல்லாவை தன் தம்பியிடம் ஒப்படைத்து விட்டு எழுந்து வந்த சுப்புடு என்னை ஆதாரத்துடன் அணைத்து கொண்டான்.
அந்த அமைப்பில் பழைய நட்பின் நெருக்கத்தை உணர்ந்தேன். நன்னா இருக்கியா இலையில் அமர்த்தி அவனே பரிமாறினான் எவ்வளவு வற்புறுத்தியும் காசு வாங்கிக் கொள்ள மறுத்து விட்டான்.
ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் அவசரமாக விடை பெற்று வெளியேறினேன்.
அரச மரத்தடி திடலில் ஊர் பிள்ளைகள் படித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்கள் அந்த நாளில்!
இன்றோ!
மாநகராட்சியின் உபயத்தில் வானொலியிலிருந்து “நேத்து ராத்திரி... யம்மா!” ஒலித்துக் கொண்டிருக்க, சில பிள்ளைகள் இடுப்பை வளைத்து தாளத்துக்கேற்றவாறு ஆடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தபோது மனதை என்னவோ செய்தது.
இருட்டிக் கொண்டு வந்தது அந்த பொழுது.
புதிதாக முளைத்த காலணிகளை தாண்டி கொண்டு வீட்டை அடைந்தேன் அம்மா தான் என்னை வரவேற்றாள்.
அப்பா போய் ரொம்ப நாளாகி விட்டது.
“ரவி.. வந்துட்டியா.. வா.. வா! ஒன்னைத்தான் எதிர்பார்த்துண்டு ஒக்கார்ந்திருக்கேன். இந்த தள்ளாத வயசிலே அவர் நினைவை சுமந்துண்டு அவர் வாழ்ந்த இந்தாத்திலே வளைய வரேன், உனக்கானும் அம்மா நினைப்பு வந்ததே...” என்று பூரித்தவளாய் திருஷ்டி சுற்றி போட்டு என்னை வரவேற்றாள் அம்மா.
இரு கைகளாலும் என்னைத் தொட்டு தடவி மகிழ்ந்தாள்.
அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.. மௌனமாக என்னை பார்த்தாள்.
“ஏம்மா என்னாச்சு நோக்கு?” என்றேன் நிதானமாக.
“ஒண்ணுமில்லை. என்னாலே ஒன் வாழ்க்கை இப்படியாயிடுத்தே, நீ ஆசைப்பட்ட அந்த ஓதுவார் பெண் ஜானகியையே பண்ணியிருந்தாக்கா இப்ப நம்ம வம்சம் விளங்க ஒரு குருத்து தளர்ந்திருக்குமே? அந்தத்து... பணம்னு வறட்டுத்தனமாய் பிடிவாதம் பிடிச்சு கண்டது தான் என்ன? இவ்வளவு சொத்து சுகமிருந்தும் நெற்களஞ்சியத்திலே வாரி இறைச்சு அளைய ஒரு பிஞ்சு இல்லையே? ஹூம் ...எல்லாம் தலையெழுத்து !” அம்மா தனக்கு தானே புலம்பினாள்.
விளக்கேற்றய பின்னும் கோட்டை போன்ற அந்த கூடம் நிர்சலனமாகவே ஓசையற்றிருந்தது. அந்த ஆழ்ந்த அமைதியும் ஆள் நடமாட்டமற்ற உறைந்த மௌனமும் எனக்குள் பனிக்கட்டியாய் இறுக்கிய சோகத்தை வெயில் பட்டாற்போல் கசிய செய்தன.
நீராடி விட்டு அம்மா வார்த்து போட்ட தோசையை சாப்பிட்டேன்.
கால்கள் பரபரக்க எப்போது சொல்வோம் என்று ஏங்கிக் கொண்டிருந்த அந்த இடத்தை நோக்கி மெல்ல நடந்தேன்.
ஊருக்கு நடு நாயகமாய் இருந்த அந்த சிவன் கோயிலை நோக்கி நடந்தேன்.
மனம் பழைய நினைவுகளில் நீந்தியது.
ஊதுவத்தியின் சுகந்த மணத்தைப்போல் ஜானகியின் நினைவுகள் மனம் எங்கும் வியாபித்தது.
ஜானகி...
சிவன் கோயில் ஓதுவாரின் பெண் தான் ஜானகி, அவர் பெற்ற மூன்றுமே பெண்கள் இதுவரை எப்படியோ கரையேற்றி விட்டார், மூன்றாமவள் தான் ஜானகி.
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு சிறிய நாட்டு ஓடு வேய்ந்த பழமையான வீட்டில் தான் அவர்கள் குடும்பம் வாசம் செய்தது.
விடியற்காலை நாலு மணிக்குகெல்லாம் எழுந்து கிணற்றடியில் குளித்துவிட்டு சிவன் கோயில் வாசலை பெருக்கி சாணம் தெளித்து பிரம்மாண்டமாக கோலமிடுவாள் ஜானகி. அவளது கை வண்ணத்தில் கோயில் வாசல் மட்டுமல்ல கோயில் பிரகாரமும் நிலைப்படியும் பளிச்சென்று கலைவண்ணத்தோடு காட்சி அளிக்கும்.
அப்பாவுக்கு ஒத்தாசையாக நந்தவனத்தில் இருந்து புதிதாக மலர்ந்த மலர்களை கொய்து பூத்தொடுத்து குடலையில் வைத்து மாலையாக எடுத்து வந்து சாத்துவாள்.
அதுவரை பட்டணத்தில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நான் அந்த வருடம் படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்கு வந்தேன்.
ஓதுவாரின் குரலோடு கணிரென்று ஒலித்த அவளது குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
நீராடி தளர முடிந்த நீண்ட கூந்தல் நுனியில் சில மலர்கள் வீற்றிருக்க நெற்றியில் திருநீறும் அதன் கீழ் குங்குமமும் காட்சியளித்தது. மஞ்சள் பூசினால் மினுமினுத்த உப்பலான கன்னங்கள்! கழுத்தில் கருகமணிச்சரம் மட்டும். வலது மூக்கில் ஒற்றை கல் மூக்குத்தி மின்னியது. வாழைத்தண்டு போன்ற பாதங்களில் வெள்ளி கொலுசுகள்.
பட்டணத்தில் விதம் விதமான முகப்பூச்சுகளையும், செயற்கை அலங்காரங்களையும் கண்டு சலித்து போன என் கண்களுக்கு எவ்வித அலங்காரமும் இல்லாத இயற்கையின் தெய்வீக அழகோடு விழிமூடி நின்ற அவள் தேவதையாகவே தெரிந்தாள்.
அவள் கோயில் வாசலில் கோலம் இடும் நேரத்தில் அதிகாலையில் பிரசன்னமாக தொடங்கினேன்.
என் பக்தியை கண்டு அம்மா பூரித்தாள்.
நானோ ஜானகி பக்தன் ஆனேன்.
வலிய அவளோடு பேச்சு கொடுத்தேன். அறிமுகத்திற்கு பின் மெல்ல மெல்ல எங்கள் நட்பு வளர்ந்தது.
கோவில் குளத்து படித்துறையில் இருட்டிய பின் நானும் அவளும் சந்தித்து பேசுவோம்.
ஆற்றில் இருந்து அவள் நீர் குடத்தோடு வரும்போது ஏதோச்சையாக வருவது போல தோளில் துண்டோடு நான் எதிர்ப் படுவது வாடிக்கையாகி விட்டது.
மற்ற பெண்களிலிருந்து வித்தியாசமான மங்கையாகவே அவள் தெரிந்தாள்.
நந்தவனத்தில் வகை வகையான மலர்களை பறித்தாலும் அவளது கூந்தலில் எப்போதும் இரண்டொரு செண்பக பூக்களே காட்சி தரும்.
முகப்பவுடரே தீண்டாமல் மஞ்சள் பூச்சில் மினுமினுக்கு முகம்!.
நாளெல்லாம் அகலத்தில் நெற்றியில் இட்டுக் கொள்ளும் குங்குமம்.
எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் அதை பற்றி பூரணமாக தெரிந்து கொண்டு அளவளாவும் பாங்கு!.
ஓ! இவள் அழகி மட்டுமல்ல மகா புத்திசாலியும் கூட!
அதிர பேசாமலே கதை பேசும் விழிகள். சிரிக்கும் போது கூட சத்தம் வெளியே கேட்காத அடக்கம்.
ஏழை ஓதுவார் வீட்டில் இப்படி ஒரு புதையலா? இவள் எனக்கே எனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற இறுமாப்போடு இருந்தேன்.
நந்தவனத்தின் பின்புறம் தெற்கு மூலையிலிருந்து பன்னீர் மரத்தடியில் இருள் மண்டி கிடக்கும் அந்தி நேரத்தில் அவளோடு அமர்ந்து பேசிய நாட்கள் ஏராளம்.
“ரவி... நீங்க என்னக் கை விட்டுட மாட்டீங்களே?” சாட்டையாய் முன்புறம் புரளும் பின்னலை விரல்களால் அளைந்து கொண்டே என் முகத்தருகே குனிந்து அவள் கேட்டபோது நான் என் வசம் இழந்தேன். சட்டென்று அவளை இழுத்து மார்போடு அணைத்து கொண்டேன்.
“என் மீது நம்பிக்கையில்லாம ஏன் இப்படி கேட்கிற ஜானா” என்றேன்.
“நீங்க பண்ணையார் வீட்டு ஒரே வாரிசு, பெரிய படிப்பெல்லாம் படிச்சவரு. ஏழை ஓதுவாரோட பொண்ணை பண காசில்லாத ஓங்காத்துலே ஏத்துப்பாளா? பெத்தவாளை எதிர்த்து நிற்க ஒங்களாலே முடியுமா?” பயத்தோடு கேட்டாள் ஜானா.
“பெத்தவா குறுக்கே நின்னா... கல்யாணமே வேணான்னுடுவேன்.... ஆமாம் ஒன்னையத்தவிர வேறொருத்தியக் கட்டிக்க மாட்டேன்!”.
அந்த அரையிருட்டில் மூக்குத்தி மின்ன அவள் என் கைகளை சட்டென்று பற்றி கண்களில் ஒற்றிக் க் கொண்டாள்.
அப்போதுதான் நினைவு வந்தவனாய் சட்டை பையிலிருந்து அந்த சிறிய பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினேன்.
“என்ன இது?” என்று ஆர்வத்தோடு திறந்து பார்த்தவள் வியப்போடு சந்தோஷப் பூக்கள் விழிகளில் சொரிய என்னை பார்த்தாள். “என்ன ரவி இது. எனக்கெதுக்கு இது?” என்றாள்.
“அன்னிக்கு கோயில் பிரகாரத்தில் ஒரு மாமி போட்டிருந்த ஒத்தை முத்து மூக்குத்தியை பார்த்து ரொம்ப அழகா இருக்குன்னு ஆசைப்பட்டியே அதான் பக்கத்தூரு நகை கடைக்கு போய் உனக்காக வாங்கிண்டு வந்தேன்!”
சிறிய நட்சத்திர பொட்டாய் நடுவில் பளிரென்று ஒற்றைக் கல்லாய் முத்து பதித்த அந்த சின்னஞ்சிறு மூக்குத்தியை பார்த்து முகம் மலர சிரித்தாள் ஜானா.
அடுத்த கணம் திருப்பிக் கொடுத்தாள்.
என் புருவங்கள் உயர்ந்தன வினாக்குறியோடு!
“ஆத்துல ஏதுனு கேட்பாளே இதை நான் எப்படி போட்டுக்கொள்ள முடியும்?”
“என் பரிசா வச்சுக்கோ. கல்யாணத்துக்குபுறமா போட்டுக்கோயேன்...” முகம் மலர, மனம் குதூகலிக்க அதை வாங்கிக் கொண்டாள் ஜானா.
எங்கள் நட்பு அரசல் புரிசலாக வீட்டுக்கு தெரிந்த போது...
எண்ணெயில் இட்ட வடாமாய் பொரிந்தார் என் தந்தை. “இந்த கிராமத்துக்கே பெரிய பண்ணையா இருக்கிற நம்ம அந்தஸ்து எங்கே? உடுத்தின பொடவைக்கு மாத்துப் பொடவைக்கே வக்கில்லாத தரித்திரம் பிடிச்ச ஓதுவார் பெண் எங்கே? என்முன்னாடி மேல் வேஷ்டியை இடுப்பிலே கட்டிண்டு பவ்யமா கும்பிடற அந்த ஏழை ஓதுவார் எனக்கு சம்பந்தியா? ஒருநாளும் இது நடக்காது. பொண்ண விட்டு ஒன்னை வசமா அமுக்கிட்டதா அந்த ஓதுவார் நினைச்சுண்ட்டிருக்கிறாராக்கும்? நடக்குமா? சீட்டைக் கிழிச்சிட மாட்டேன். மாப்பிள்ளைக்கு வைரமோதிரம் பண்ணிப்போட முடியுமா... இந்த ஜென்மத்திலே அவராலே!”
அப்பாவின் கெடுப்பிடிக்கு முன்னால் என் போராட்டங்கள் பயனற்று போயின.
ஓதுவார் என் தந்தையால் அவமானப்படுத்தப்பட்டார்.
அப்பா நினைத்தபடி பெரிய இடத்தில் எனக்கு பெண் பேசி திருமணம் நடந்தது.
சொந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் வடக்கே வேலை தேடிக்கொண்டு போய்விட்டேன். கடந்த பத்தாண்டுகளாய் ஊர் பக்கம் திரும்பவில்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவள் முகத்தில் விழிப்பேன்.?
சொத்தும், சீருமாக “அந்தஸ்தோடு” வந்த ‘பெரிய’ இடத்துப் பெண்ணான என் மனைவி நிர்மலா ஒரு நாள் எதிர் பிளாட் குஜராத்திக்காரனோட ஓடிப் போனாள்.
பிழைப்பைப் தேடி போன இடத்திலும் அவமானம் துரத்தியது.
எனக்கு வேண்டியதுதான். நம்பியவர்களுக்கு செய்த துரோகத்திற்கு சரியான தண்டனை.
பாரிசவாயுவில் (stroke) படுத்த அப்பாவும் இரண்டு ஆண்டுகளில் போய் சேர்ந்தார்.
கிராமத்தில் தனியாக தவித்துக் கொண்டிருந்த அம்மாவின் வேண்டுகோள்களை தாங்கி வந்த கடிதங்கள் நாளடைவில் என் நெஞ்சில் மாற்றத்தை உண்டு பண்ணவே செய்தன.
எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கொண்டு வடக்கே இருந்தே திரும்பிவிட்டேன். இனிமேல் கடைசி வரை நிரந்தரமா இங்கேயே தங்கிவிடும் உத்தேசத்தோடு!
அதன் பிறகு ஜானகி என்ன ஆனாள் என்றே தெரியவில்லை. அவளைப் பற்றிய சேதி எதுவுமே என் செவிகளுக்கு எட்டவில்லை சொல்வதற்கும் ஆள் இல்லை.
எப்படியாவது அவளை ஒரு தரம் பார்த்து மனப்பூர்வமாய் மன்னிப்பு கேட்க வேண்டும்!
அவளைப் பற்றி யாரிடம் கேட்பது வாய் வரவில்லை.
சிவன் கோயில் பக்கத்தில் அவளை காணோம் தெப்பக்குளத்து படித்துறையிலும் அவளை தேடி என் கண்கள் பூத்து போயின.
ஏமாற்றத்தோடு நடந்தேன்.
பூக்கூடையோட எதிரே வந்த அந்த பெண்ணை கண்டதும் பொறி தட்டியவளாய் அப்படியே நின்றேன்.
“பூ வேணுமா... மல்லிகை பூ.. கதம்பம்.. செண்பகப்பூ கூட இருக்கு.”
தூக்கி வாரி போட்டது.
“நீ...நீ... ஜானகி இல்லே” என் குரலைக் கேட்டு விருட்டென நிமிர்ந்தாள் அவள்.
வெள்ளைப் புடவையில் மூலியான கழுத்து செழுமையெல்லாம் வடிந்து போன மெலிந்த தேகம் இவளா என் ஜானகி?
கனவுகள் மிதந்த விழிகளில் ஏமாற்றம் தேங்கிப்போய்.... ஓ ...இவள் இன்று இந்த நிலைமையடைய யார் காரணம் நான் தானே?
ஒருவேளை இவளை நான் கைப்பிடித்திருந்தால்... இவள் பழைய ஜானகியாய் மூக்குத்தி மின்ன குத்து விளக்காய் ஒளித்திருப்பாளோ?
“என்னைத் தெரியலையா ஜானகி ? நான்தான் ரவி எல்லாமே கனவாகி போச்சு. என்னை மன்னிச்சிடு” நாதழுதழுத்தது.
என் அருகில் வந்தவள் தீர்க்கமாய் பார்த்தாள். விழிகளில் நீர் பெருகியது அதே பன்னீர் பூ மரத்தடி.
“எல்லாமே என் தலையெழுத்து. யார் யாருக்கு பகவான் தலையில என்ன எழுதியிருக்கானோ... அதுப்படி நித்திய கர்மா நடக்கிறது. எனக் கொடுப்பினை இல்லே அப்பாவும் போயிட்டார் என்னை கைப்பிடித்த பிராமணரும் ஆறு மாசத்தில் போய்ச்சேர்ந்துட்டார். முன்னமே இருதயக் கோளாறு உள்ளவர்ங்றந்து பின்னாடி தான் தெரிஞ்சது. தெரிஞ்சு என்ன செய்ய ? எல்லாம் பிராப்தம்?” சட்டென்று அருகேயுள்ள குடிசையில் மறைந்தாள்.
என் முன் நீட்டிய அவளது கரத்தில் அந்த பெட்டி இருந்தது. ஒரு காலத்திலே நீங்க எனக்கு கொடுத்த பரிசு ஆசையா போட்டுக்கற சந்தர்ப்பம் இதுவரை வரலே. நம்ம கல்யாணத்துக்கப்புறமா போட்டுக்கோணும்ன்னு நெனச்சிண்டுருந்தேன். நடக்கலே, இப்போ....நிரந்தரமா மூக்குத்தியை கழற்ற வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்துடுச்சு ஏன்னா.... நான் இப்ப சுமங்கலி இல்லே இந்தாங்கோ”
என் கையில் அந்த சிறிய பெட்டித் திணித்துவிட்டு நடந்தாள் ஜானகி. ஒற்றைக்கல் முத்து மூக்குத்தி என்னை பார்த்து ஏளனமாய் சிரித்தது.
ராஜம் இதழில் வெளிவந்தது.
ஆண்டு ஜூன் 1991.

.jpg)
No comments:
Post a Comment