வள்ளியூரில் இருந்து வந்த ஆள் சொன்ன சேதியை கேட்டதும் பொன்னாத்தாளின் மனதிலிருந்த நம்பிக்கை முடிச்சு, மெல்ல மெல்ல தளரத் தொடங்கியது!
“கழுத்துக்கு ரெண்டு பவுன்ல அட்டிலு போட்டாகணும்னு கண்டிஷன்ல மாப்பிள்ளை வூட்ல சொல்லி அனுப்புனாக. அட்டிலு ரெடியான பிறகு கல்யாண தேதியை வெச்சிக்கிடலாமும்னு சொல்லச் சொன்னாக. அப்ப நான் வரவா?” என்று கேட்டபடியே எழுந்த கந்தசாமியைப் பார்த்தாள் பொன்னாத்தா.
கந்தசாமி, மாப்பிள்ளை வீட்டுக்கு உறவுக்காரன். பெண் பார்த்து விட்டுப் போன சம்மந்தி வீட்டிலிருந்து முகூர்த்த தேதி குறித்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு இந்த சேதி அதிர்ச்சி அளித்தது.
“ஒரு வாய் காப்பி தண்ணி குடிச்சுட்டு போகலாமில்லே?” என்றாள் உபசாரமாக.
“எல்லாம் ஒரேடியா கல்யாண சாப்பாடே சாப்பிட்டுக்கறேன் பொறவாலே” என்றான் கந்தசாமி.
“பயனியாச்சும் குடி!” என்றபடி ஒரு அலுமினிய குவலையில் பதநீர் நீட்டினால் பொன்னாத்தா அதை வாங்கி மளமளவென்று பருகி விட்டு புறப்பட்டான் கந்தசாமி.
உள்ளே விறகடுப்பு புகைந்தது.
அவளது மனமும் புகையத் துவங்கியது.
ஏமாற்றத்தால் ஏற்பட்ட பதற்றத்தில் மனம் அல்லாட தனக்குத்தானே புலம்பினாள் பொன்னாத்தா. “அன்னிக்கு பொண்ணைப் புடிச்சிருக்கு நகையைப்பத்தி இப்ப என்ன, என்டவுக, இப்ப திடும்ன்னு “ரெண்டு பவென் அட்டிலு போட்டாகணும்னு குண்டைத் தூக்கி போடுறாகளே! நான் எங்கன போவேன் அம்புட்டு பணத்துக்கு? பவுனு கொஞ்ச விலையா விக்கி ? அரிசியும், பருப்பும் விக்கிற விலைவாசியில காசை மிச்சம் பிடிச்சு சேர்த்து அட்டிலு எந்த காலத்துல வாங்கி இந்த பொம்பள புள்ளைய கரையேத்தறது.?”
முருங்கைக் கீரையை உருவிக்கொண்டே பொறுமினாள் பொன்னாத்தா.
திடீரெண்டு பக்கத்து வீட்டுக் கொல்லையிலிருந்து வெள்ளாடுகள் “மே” என்று கோரசாக கத்தியபடி ஒன்றோடொன்று முட்டி மோதி முண்டியடித்தபடி, திறந்திருந்த வேலிப்படல் வழியே வந்தன கும்பலாக!
கீரை ஆய்வதை சட்டென நிறுத்திவிட்டு பொறித் தட்டியவளாய் நிமிர்ந்தாள்.
அவள் வீட்டு ஆடுகள் தான். பக்கத்துக் கொல்லையிலிருந்து விரட்டப்பட்டு உள்ளே தஞ்சமடைந்தன.
பக்கத்து வீட்டு சிவகாமி பெரிய வாயாடி! துரும்பைத் தூணாக்கி பேசுகிற வம்புக்காரி. அவளது வாயாடித் தனத்தை கண்டாலே குளிர் எடுத்து விடும் பொன்னாத்தாவுக்கு.
அவள் பயந்தது போலவே பக்கத்து வேலிபடலில் இருந்து கூச்சல் கிளம்பியது, பூகம்பம் வெடித்தது போல!
“கொல்லையில் வளர்ந்திருந்த அரைக்கீரை பாத்தியணையெல்லாம் கபளீகரம் பண்ணிடுச்சே நாசமாப் போன ஆடுக! வளக்கறவர்களுக்கு புத்தி வேணாம்! அடுத்த வூட்டிலே மேய வுட்டா ஆடு வளர்ப்பாக? அதுக வவுத்துல கொள்ளை வர! கீரைப்பாத்திக அம்புட்டும் போச்சே! ஆரு கொடுப்பாவ? இதுவே நம்மூட்டு ஆடு அங்கன போயி இருக்கட்டும்... சாமியாடிக்கிட்டு வந்துடுவாகளே, வம்புக்கு கோலூண்ணிகிட்டு....”
சிவகாமியின் சொல் அம்புகள் வேலிப்படலைத் தாண்டி குடிசை முற்றத்தில் அமர்ந்திருந்த பொன்னாத்தாளின் செவிகளில் வந்து விழுந்தன.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவளால் தாங்க முடியவில்லை.
“இந்தா, செவகாமிக்கா! ஆரு சாமியாடிக்கிட்டு வந்தது ஒம் வீட்டுக்கு? வாயில்லா சீவனுங்க தெரியாம கீரையை மேய்ந்துடுச்சுக. அதுக்காவ சகட்டு மேனிக்கு பேசுறீயளே” என்றாள்.
இந்த பதிலடியால் உசுப்பப்பட்ட சிவகாமி கோபத்தோடு வேலிபடலருகே வந்தாள். “இதுக்கு மட்டும் வக்கனை பேச வந்துட்டீயளே? அம்புட்டு ரோஷம் இருக்கவுக, ஆடுகளை கட்டிப்போட வேண்டியதுதானே? ஒங்க ஆடுவ கொழுக்க என் வூடு தானா கெடச்சுது” என்றாள்.
“இந்தா, சும்மா வையாதே. நானே நொந்து கிடக்கேன் நீ வேற குத்தாதே” என்றாள் பொன்னாத்தா.
“அடியாத்தி! நான் என்னவோ வேலை வெட்டி இல்லாம ஓங்கிட்ட வந்து வம்பு வளக்கற மாதிரியில்ல பேசுதே? ஆடுகளை வளர்க்கத் தெரியலே . பேச வந்துட்டாளுவ, பேச....” என்றவாறே கழுத்தை நொடித்தாள் சிவகாமி. அவள் நொடித்த நொடிப்பில் காதுகளில் தொங்கிய பாம்படங்கள் ஒரு குலுங்கு குலுங்கி ஊஞ்சலாட்டம் ஆடின.
“ஆடுக ஒம்மூட்டு கீரையைத் தின்னதுக்கு என்ன செய்யணுங்கறே? வெட்டி போடவா!?”
“நீ வெட்டிதான் போடு, இல்லே காத்தவராய சாமிக்கு பொங்க தான் வையி எனக்கென்ன வந்தது?” என்று மறுபடி நொடித்து கொண்டே குடிசையினுள் மறைந்தாள் சிவகாமி.
“என்ன பொன்னு, ஏன் ஒரு மாதிரி இருக்கே?” காட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கொல்லை கிணற்றில் குளித்துவிட்டு வந்த பொன்னாத்தாவின் கணவன் பாண்டி சாப்பிட அமர்ந்தான்.
சுடுசோற்றில் முருங்கைக் கீரையை பிசைந்து கொண்டேன் மனைவியை பார்த்தான். ஏதோ செய்தி இருக்கும் என்பதை மனைவியின் இறுகிய முகமே அவனுக்கு தெரிவித்தது. மழைக்கு முன் மூட்டம் போட்ட வானம் போல அவள் முகம் கனத்திருந்ததை கண்டு அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.
“வள்ளியூரிலிருந்து சேதி சொல்லி அனுப்புனாக நம்ம மவளுக்கு ரெண்டு பவெனில் அட்டிலு அவசியம் போட்டாகணுமாம். அட்டியலை ரெடி பண்ணிட்டா கல்யாணத் தேதியும் ரெடினு சொன்னாவ.!”
சோற்றைப் பிசைந்த பாண்டியின் கை அப்படியே நின்றது.
“தோடு, ஜிமிக்கி, மூக்குத்திக்கு தான் நம்மாலே ஏலும்னு முன்னமே சொன்னம்ல ? திடீர்னு அட்டியலு வேணுமும்ன்னா பணத்துக்கு எங்கன போவறது ? ஏதும் தோது படலியே !” யோசனையுடன் சாப்பிட்டு முடித்தான் பாண்டி.
“மாப்பிள்ளை சொந்தமா பொட்டிக்கடை வச்சிருக்கானில்லே? நாம அட்டிலு போடாட்டி வேற யாராச்சும் கொடுக்கிறவுக வீட்ல சம்மந்தம் பண்ணிக்கிடுவாக. பையன் நல்ல சம்பாதியக்காரன். எப்படியாச்சும் அட்டிலு பண்ணிட்டம்னா, நம்ம மீனாட்சி அங்கன போயி நல்லா வாழுவா”
“என்னடி பெனாத்தற? ரெண்டு பவுன் ஆறாயிறத்துக்கு மேல ரொக்கம் வேணுமே ? எப்படி பெரட்டா ஏலும்?” பாண்டி யோசனையுடன் கொல்லையிலிருந்த பலா மரத்தை வெறித்தான்.
வெள்ளாடுகள் தழையைத் தின்றபடி குரல் கொடுத்தன.
பொறி தட்டியது.
முகத்தில் வெளிப்பூச்சுகள் பளீரிட... கணவனை பார்த்தாள் பொன்னாத்தா. “ஏங்க நம்ம வெள்ளாடுகளை வள்ளியூர் சந்தையிலே வித்து காசாக்கினா அட்டிலு வாங்க ஏலும் இல்லே?”
மெல்ல சிரித்தான் பாண்டி.. “இந்த ஆறு வெள்ளாடுகள்ல, சினையாட்டைத் தவிர மத்ததை விக்க வெலை பேசிப்புட்டேன்டி! அதை வச்சு தான் நம்ம மீனாட்சி கல்யாணமே நடக்கணும். ?”
கணவனின் பதில், அவளுக்கு ஏமாற்றத்தையே தந்தது.
வீட்டில் விற்பதற்கோ, அடகு வைப்பதற்கோ எந்தப் பொருளும் இல்லை. பொன்னாத்தாகளின் பரம்பரை சொத்தாக இன்று வரை பேணி வந்த ரெண்டு பவுன் பாம்படங்ககளை தான், மகள் மீனாட்சிக்கு கல்யாண நகை! ஆம்... அந்த பாம்படங்களை அழித்து தோடு, ஜிமிக்கி செய்ய ஆசாரிடம் தந்து விட்டாள் பொன்னாத்தா. இப்போது அவளது காதுத்துளைகளில் வெறும் குறுத்தோலை தான் சுருளாக சொருக்கப்பட்டிருக்கின்றன.
வீட்டில் சட்டி பானைகளைத் தவிர, அலுமினியப் பாத்திரங்கள் மட்டுமே இருந்தன.
அந்த மண் வீடு மட்டுமே அவர்களுக்கு சொந்தமானது. வெள்ளை அடிக்க நீண்ட காலம் ஆனதால் சுவர்கள் பழுப்பேறி கிடந்தன. பாண்டியோ பனையேறி அதில் வரும் வருமானத்தில் எப்படியோ காலம் கரைந்து கொண்டிருந்தது.
இரண்டு பெண்களில் மூத்தவளை எப்படியோ கரையேற்றி விட்டார்கள். இளையவள் மீனாட்சியின் கல்யாணம்தான் கேள்விக்குறியாய் இருந்தது.
எப்படியோ வள்ளியூரிலிருந்து பெண் பார்க்க வந்தவர்களுக்கு அவளைப் பிடித்து போயிற்று. திருமண தேதியை எதிர்பார்த்து இவர்களுக்கு சம்பந்தி வீட்டிலிருந்து வெடித்த குண்டு அதிர்ச்சியூட்டியது.
“அட்டிலு இல்லேன்னா, கல்யாணம் முடிக்க மாட்டவுக இல்லே?” பாதித் தூக்கத்தில் எழுந்து கொண்டு பொன்னாத்தா கேட்டாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை.
“ஓறங்குலே ! எழுப்பி என்ன கேள்வி கேட்குதே?” கணவனிடம் அதட்டல் அவளை மேலே பேச விடவில்லை.
சந்தையில் ஆடுகளை விற்றுக் கிடைத்த பணத்தை முட்டை விளக்கு வெளிச்சத்தில் எண்ணிப் பார்த்தான் பாண்டி.
“இரண்டாயிரத்து நூறியிருக்கு கல்யாண செலவுக்கு காணும். தோடு, ஜிமிக்கி செய்ய பாம்படத்தை கொடுத்தாச்சு, அட்டிலு தான் பெரிய செலவு, ஒண்ணும் தோது பண்ண ஏலலியே... என்ன செய்யறது?” பாண்டி யோசனையுடன் மோட்டு வளையை பார்த்தான்.
“காசுக்கடை செட்டியாருகிட்டே இந்த வீட்டும் பேரிலே கடனா கேட்டுப் பாருமே” நூல் போல நெஞ்சில் நம்பிக்கை இழை தறிபோட கணவனைப் பார்த்தாள் பொன்னாத்தா.
“இந்தப் பொத்தல் குடிசைக்கு எவண்டி அம்புட்டு பெரிய தொகையை ஒத்தியா தருவான்? வெறும் மண் குடிசை”
“என்னதான் வழி அப்போ?” தவிப்போடு கேட்டாள் பொன்னாத்தா.
“அதுதான் எனக்கும் புரிபடலே!”.
பீடியைப் புகைத்துக் கொண்டே வெளியே வெறித்தான் பாண்டி. இருட்டின் அந்தகாரத்தில், வெகு தொலைவில் புள்ளியாய் எங்கோ ஒரு மூலையில் வெளிச்சம் தெரிந்தது.
“கந்தசாமிகிட்டே வெவரம் சொல்லி அனுப்பினேனே? என்னா ரோசனை பண்ணிக?” மாப்பிள்ளையின் தந்தை ஆறுமுக நாடார், குடையை மடக்கியபடி தாழ்ந்த கூரைக் குனிந்து திண்ணையில் அமர்ந்தார்.
“அட்டிலுதான் தோது பண்ணலே இன்னும்...” மெல்ல இழுத்தான் பாண்டி.
“கட்டிட்டு வார பொண்ணு கழுத்துல அட்டிலு இல்லேன்னா எங்களுக்கு கவுரவமா இருக்குமா? தோது பண்ண பாருவே!” என்றபடி திரும்பி நடந்த ஆறுமுகம் நாடாரை வெறித்தான் பாண்டி.
ஏதும் பேசத் தோன்றாமல் இருவரும் கல்லாய் இறுகிக் கிடந்தனர்.
இருட்டின் ஆதிக்கம் வெளியில் மட்டுமல்ல அவர்கள் மனதிலும் தான்.
“என்ன பொன்னாத்தா, சம்பந்திவூட்டுக்காரவுக வந்துட்டு போறப்புல இருக்கு... என்ன சேதி?” வெற்றிலையைக் கொதப்பிக்கொண்டே உள்ளே வந்தாள் சிவகாமி, ஒருபுறமாய் காதோரம் சரிந்த கொண்டையும், பாம்படமுமாய் வந்த அவள் நெற்றியில் எட்டணா அகலத்திற்கு குங்குமப்பொட்டு ஜொலித்தது.
நாலு நாட்கள் முன்பு சண்டை போட்டவள், அதை மறந்து உள்ளே வந்ததால், பொன்னாத்தாவும் தயக்கத்தை விரட்டினாள்.
“வா, செவகாமியக்கா ! மீனாட்சி கல்யாணம் நடக்குமான்னு சம்சயமா இருக்குது. ரெண்டு பவுன்ல அட்டிலு போட்டாதான் அவ கழுத்துல தாலி ஏறும். முட்டி மோதி பாத்தாச்சு அம்புட்டு பணத்துக்கு வழிவகை தெரியலை. இந்த மனையையும் ஊட்டையும் கிரயம் பண்ணலாமுன்னா, தொகை கொறவாக் கேக்குறாக! என்ன செய்யறதுன்னே தெரியலே...” அழாத குறையாகச் சொன்னாள் பொன்னாத்தா.
“அட கவலையைவுடு, எனக்கு என்ன புள்ளையா, குட்டியா? வாய்ச்சவனும் சரியில்லே என் பேர்ல இருந்த பணங்காட்ட எழுதி வாங்கி. கூத்தியாவூடே கதின்னு போயிட்டாக! நானு பாலை வித்து பயனி வித்து வட்டிக்கு விட்டு பேயா காசு சேர்த்து எந்த புள்ளைக்கு குடுக்க போறேன் ? என்னட ரெண்டு பவுன் அட்டியலை அந்த பாவி மனுஷனுக்குத் தெரியாம பத்திரமா வச்சிருக்கேன். அதைத்தாரேன். மீனாட்சி கலியாணத்தை சந்தோஷமா முடி. “
பன்னீராய் பொழிந்த இந்த எதிர்பாராத இன்பத் தாக்குதலால் நெக்குருகி போனாள் பொன்னாத்தா.
“ஆத்தா எங்க வவுத்துல பாலை வார்த்தீக ! நாளைக்கே வீட்டை கெரயம் பண்ணி பத்திரம் எழுதி புடலாம் உங்க ஒத்தாசையை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். “
பாண்டி நெகிழ்ந்து போய் கண்ணீர் வடித்தான். அவளால் நம்ப முடியவில்லை.
“பத்திரம் கெடக்கட்டும். பக்கத்துவூட்டுக்காரவுக நாணயத்துக்கு எங்காச்சும் பத்திரம் பதியறகளா? நான் வயசான கட்டை பாய்ல, படுக்கையில உளுந்தா கவனிக்க நாதியத்தவ. அப்பிடி ஒரு நெலைமை எனக்கு உண்டாச்சுன்னா, இன்னைக்கு சொல்றேன் பொன்னாத்தா... கூட பொறந்த பொறப்பா நெனச்சு நீ தான் என்னைய கவனிச்சுக் கரையேத்தணும். அதுக்கு சம்மானமா நான் அட்டிலு தரேன். இது விஷயம் நமக்குள்ள இருக்கட்டும். சொவர தாண்டி தெரிய வேண்டாம்!”.
சிவகாமியைக் கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள் பொன்னாத்தா. பாறை போன்ற கடினமான ஓட்டுக் குள்ளே பதுங்கியிருந்து, சீவப்பட்டதும் தாகம் தீர்க்கும் மென்மையான நுங்கை போன்ற அவள் மனதை புரிந்து கொண்ட சாயல் அந்த இறுக்கத்தில் தெரிந்தது.
பாக்யா 26.11.92 வெளிவந்தது.

.jpg)
No comments:
Post a Comment