Appu Movies

Monday, July 6, 2026

வித்தியாசமானவள் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா

July 06, 2026 0
 வித்தியாசமானவள் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா


 


  சேதி கேட்டவர்கள் எல்லோரும் தெருவில் ஓடிக் கொண்டிருந்தார்கள்.  நான் புரியாமல் திகைத்து நின்றேன். 


  இந்த சிற்றூரில் இருப்பதோ ஏழெட்டு தெருக்கள் தான். 


“ஏகாம்பரம்! என்ன சேதி? ஊருசனம் மூச்சூடும் இந்த ஓட்டம் ஓடுதே?”


தலைச்சுமையை போட்டு விட்டு நின்ற அவனிடம் கேட்டேன். 


“சாமி குடியானவத் தெருமுக்கு வூட்டுல வண்டிக்கார பழனி வியாபாரத்துக்கு போன இடத்துல மாரடைப்பு வந்து செத்துட்டாக.  வண்டில எடுத்திட்டு வந்திருக்காங்க”. என்றான் சும்மாடை உதறிக் கொண்டே.


“அடடா! புள்ள குட்டிக்காரனாச்சே ! பொஞ்சாதியும் சின்னசிறிசு!  வூட்டை விட்டு போட்டு வெளியே வந்தா, வழிதெரியாது அந்தப் புள்ளைக்கு! சரி நீ வூட்டை பாத்துக்க போய்ப் பார்த்துப் போட்டு  வர்றேன்”.


முக்கு தெருவை நோக்கி நடந்தேன். 


பழனியின் உடல் அவன் வூட்டு முற்றத்தில் கிடத்தப்பட்டிருந்தது. 


கதறலும், அழுகுரலுமாக  அந்த இடம் சோகத்தில் மூழ்கியிருந்தது.  அவன் மனைவி அம்மணிப்பொண்ணு, பழனியின் உடம்பின் மீது விழுந்து கதறிக் கொண்டிருந்தாள்.  குஞ்சும் குளுவானுமாக நாலு பிஞ்சுகளும் தாய் அழுவதை கண்டு இனம் புரியாமல் பிரமித்திருந்தன. 


அப்போதுதான் அந்தப் பெண்ணைக் கண்டேன். 


மாந்தளீர்  நிறத்தில் களையான முகத்தோடு இருபத்தெட்டு வயதுக்கு மேற்படாத அந்தப் பெண், அம்மணிப் பொண்ணை அணைத்துக்கொண்டு கதறிக் கொண்டிருந்தாள். 


  “என்ர மவராசா!... எங்களை அநாதையாக்கிப்புட்டு போயிட்டீங்களே!  எங்கொறையை யாருகிட்டே சொல்லி யழுவேன் என் ராசா...” அவளது கதறலும் அழுகையும் நெஞ்சை பிழிந்தது.


  மெல்ல வெளியே வந்தேன். 


   “ஆருங்க இந்த புள்ளே , புதுசா இருக்கு?” என்றேன் இறங்கிய குரலில், என்னருகே நின்ற  ராமசாமியிடம். 


   “கொஞ்ச  முன்னதான் எனக்கும் விவர தெரிஞ்சுது! சந்தை யாவாரம் தானே பழனிக்கு ! போற எடத்துல பழக்கமாகி இந்த புள்ள கூட தொடுப்பாம்! பேரு பாப்பாத்தியாம்! செத்துப் போனவனை தனியா அதுதான் வண்டியிலே ஏத்திட்டு வந்து வூடு கொண்டாந்து சேர்த்தது” என்றாள் மெல்ல. 


  “அம்மணிக்கு இந்த விஷயம் தெரியுமா” என்றேன். 


   “நீ  ஒண்ணு ! அது ஒரு வெள்ளைச்சோளம்! இதெல்லாம் தெரியாது. பழனி அந்த விஷயத்திலே  ரொம்ப அழுத்தக்காரன்! கல்யாணத்துக்கப்புறம்தான் தொடுப்புன்னு நினைக்கிறீங்களா?”


“பின்னே”


“அதான் இல்லே! கல்யாணத்துக்கு முந்தியே பழக்கமாம்! இதை லேசுபாசா பெத்தவங்க தெரிஞ்சுட்டுத் தான் பழனிக்கு மொறைப் பொண்ணை இழுத்து வெச்சு  கட்டி வச்சாங்க”


“அந்தப் பாப்பாத்தி....தன்னைக் கைவுட்டுட்டு அவன் வேற பொண்ண கல்யாணம் செய்துக்க எப்படி சம்மதிச்சுச்சு”


“வீட்டுப் பெரியவங்க விரும்பலேங்கறது  தெரிஞ்சதும்,  முறைப் பொண்ணையே கட்டிக்கச் சொல்லி அதுதான் கட்டாயப்படுத்துச்சாம்! பழனிக்கு துளியும் இஷ்டமில்லையாம்!”


  வியப்போடு அவனைப் பார்த்தேன். 


அவளோட அலாதியான அந்த குணத்தாலே தான் பாப்பாத்தியப் பிரிய மனமில்லாம பிசினா ஒட்டிக்கிட்டான். 


“நீயென்ன சொல்றே” என்று அவன் முகத்தைப் பார்த்தேன். 


“அவ சொன்ன மாதிரி மொறைப்பொண்ணை கட்டிக்கிட்டான்! ஆனா விரும்பினவளைக் கைகழுவ மனசு ஒப்பாமே, அந்த பாப்பாத்தியையும் பொஞ்சாதியாகிட்டான், நடுவூட்டு தாலிகட்டி. 


அம்மணி பொண்ணுக்கு இன்னவரைக்கும் இந்த விவரம் தெரியாது.  கொஞ்சமின்னே தான் இந்தப் பாப்பாத்தியப் பார்த்து திகைச்சது, பழனிக்கு இப்பிடியொரு தொடுப்பு இருக்கானு. 


நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, பரபரப்பாக வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் பாப்பாத்தி. 


அழுதழுது வீங்கி சிவந்த முகத்தில் கண்ணீரின் ஈரத்தில் கேச கற்றைகள் கன்னத்தில் ஒட்டி இருந்தன. 


அவள் என்னை நோக்கி வந்தாள். 


  “அய்யா அவுகளைக் கரையேத்தனும் காரியத்துக்கு செலவு செய்ய அந்த புள்ள கிட்ட காசில்லே! அது ஒரு அப்புராணி  சென்மமுங்க!.  அய்யா! பெரிய மனசு பண்ணி ஒரு ஒதவி செய்யோணுமுங்க !” என்று இறங்கிய குரலில் கேட்ட அவளை பார்த்தேன்.


சட்டென்று கழுத்து அட்டியலை கழற்றினாள். 


  “இந்த அட்டியலை வித்துக்குடுங்கனுங்க. சாயங்காலத்துக்குள்ள அவுகள காட்டுக்கு அனுப்பி வைக்கணுங்க” என்றவள் பொங்கி வந்த கண்ணீரை சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். 


அவள் நீட்டிய அட்டியலை  வாங்கி பார்த்தேன். 


நாலு பவுன் இருக்கலாம். 


“அடகு வெக்கலாமே” என்றேன். 


  “இல்லீங்க சாமி காட்டு செலவு, காரிய செலவு, ஏகப்பட்ட செலவு இருக்குதுங்களே. வவுத்துப்பாடு வேறே! பணம் மிஞ்சினா அதிலேதான் யாவாரம் செய்யணுமுங்க அடமான வச்சாக்கா திருப்ப முடியாது வட்டியும் கட்ட முடியாது. “


. இடிந்து போன அந்த நிலையிலும் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை பற்றி தீர்க்கமாக முடிவெடுத்து செயல்பட்ட அந்தப் பெண்ணை பார்த்தபோது அவள் மீது புதியதோர் மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது. 


அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் மளமளவென்று  நடந்தேறின. 


எடுத்து செய்ய ஆளில்லாத அந்த வீட்டில், ஒரு ஆம்பளையைப் போல் முடிவெடுத்து காரியமாற்றினால் பாப்பாத்தி. 


காரியம் முடிந்தபின் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்த பாப்பாத்தியை கண்டு மலைத்துப் போனேன். 


வெற்று கழுத்தும், மூளியான உடம்புமாய், குங்குமம் இழந்த நெற்றியோடு பளீரென்ற வெள்ளை புடவையில் காட்சி தந்த அவளைக் கண்டு திகைத்துப் போனேன். 


என்னைக் கண்ட அவள் தயங்கினாள். 


  “அய்யா, கும்புடறேங்க!  அவங்க செஞ்சுட்டிருந்த சந்தை யாவாரத்தையே  இப்ப நானும் செய்யப்போறேங்க ! என்ர சக்களத்திக்கு ஒரு மண்ணும் தெரியாதுங்க.  இந்த புள்ளைங்களை வளர்த்துக் கரையேத்தணுங்களே. துக்கம்னு மூலையிலே மொடங்கினா... புள்ளைங்க பசியை ஆருங்க ஆத்தறது? அதான்”  என்றவாறே வண்டியில் ஏறினாள் பாப்பாத்தி. 


  “சின்ன வீடு” ஊர் உலகத்தில் குடும்பத்தை குட்டிசுவராக்கும், பணத்தை கரைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 


ஆனால்...


  “பெரிய வீட்டின் முற்றுப் பெறாத கடமைகளை நிறைவேற்ற சின்ன வீடு தன்னை மெழுகாய் உருக்கிக் கொள்ளும் அதிசயத்தை இப்போதுதான் பார்க்கிறேன். 

  குங்குமம்  ஜனவரி 1993.


மானுடம் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா

July 06, 2026 0
மானுடம் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா


வள்ளியூரில் இருந்து வந்த ஆள் சொன்ன சேதியை கேட்டதும் பொன்னாத்தாளின் மனதிலிருந்த நம்பிக்கை முடிச்சு,  மெல்ல மெல்ல தளரத் தொடங்கியது!


   “கழுத்துக்கு ரெண்டு பவுன்ல அட்டிலு போட்டாகணும்னு கண்டிஷன்ல மாப்பிள்ளை வூட்ல சொல்லி அனுப்புனாக. அட்டிலு ரெடியான பிறகு கல்யாண தேதியை  வெச்சிக்கிடலாமும்னு சொல்லச் சொன்னாக.  அப்ப நான் வரவா?”  என்று கேட்டபடியே எழுந்த கந்தசாமியைப் பார்த்தாள் பொன்னாத்தா.


கந்தசாமி,  மாப்பிள்ளை வீட்டுக்கு உறவுக்காரன்.  பெண் பார்த்து விட்டுப் போன சம்மந்தி வீட்டிலிருந்து முகூர்த்த தேதி குறித்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு  இந்த சேதி அதிர்ச்சி அளித்தது. 


  “ஒரு வாய் காப்பி தண்ணி குடிச்சுட்டு போகலாமில்லே?” என்றாள் உபசாரமாக.


“எல்லாம் ஒரேடியா கல்யாண சாப்பாடே சாப்பிட்டுக்கறேன் பொறவாலே” என்றான் கந்தசாமி.


   “பயனியாச்சும் குடி!”  என்றபடி ஒரு அலுமினிய குவலையில் பதநீர் நீட்டினால் பொன்னாத்தா அதை வாங்கி மளமளவென்று பருகி விட்டு புறப்பட்டான் கந்தசாமி.


உள்ளே விறகடுப்பு புகைந்தது.


அவளது மனமும் புகையத் துவங்கியது. 


ஏமாற்றத்தால் ஏற்பட்ட பதற்றத்தில் மனம் அல்லாட தனக்குத்தானே புலம்பினாள் பொன்னாத்தா.  “அன்னிக்கு பொண்ணைப் புடிச்சிருக்கு நகையைப்பத்தி இப்ப என்ன, என்டவுக,  இப்ப திடும்ன்னு  “ரெண்டு பவென் அட்டிலு போட்டாகணும்னு குண்டைத் தூக்கி போடுறாகளே! நான் எங்கன போவேன் அம்புட்டு பணத்துக்கு?  பவுனு கொஞ்ச விலையா விக்கி ? அரிசியும்,  பருப்பும் விக்கிற விலைவாசியில காசை மிச்சம் பிடிச்சு சேர்த்து அட்டிலு எந்த காலத்துல வாங்கி இந்த பொம்பள புள்ளைய கரையேத்தறது.?”


முருங்கைக் கீரையை உருவிக்கொண்டே பொறுமினாள் பொன்னாத்தா. 


  திடீரெண்டு  பக்கத்து வீட்டுக் கொல்லையிலிருந்து வெள்ளாடுகள் “மே” என்று கோரசாக கத்தியபடி ஒன்றோடொன்று  முட்டி மோதி முண்டியடித்தபடி, திறந்திருந்த வேலிப்படல் வழியே வந்தன கும்பலாக! 


கீரை ஆய்வதை சட்டென நிறுத்திவிட்டு பொறித் தட்டியவளாய் நிமிர்ந்தாள். 


அவள் வீட்டு ஆடுகள் தான். பக்கத்துக் கொல்லையிலிருந்து விரட்டப்பட்டு உள்ளே தஞ்சமடைந்தன. 


பக்கத்து வீட்டு சிவகாமி பெரிய வாயாடி!  துரும்பைத் தூணாக்கி பேசுகிற வம்புக்காரி. அவளது வாயாடித் தனத்தை கண்டாலே குளிர் எடுத்து விடும் பொன்னாத்தாவுக்கு. 


அவள் பயந்தது போலவே பக்கத்து வேலிபடலில் இருந்து கூச்சல் கிளம்பியது, பூகம்பம் வெடித்தது போல! 


“கொல்லையில் வளர்ந்திருந்த அரைக்கீரை பாத்தியணையெல்லாம்  கபளீகரம்  பண்ணிடுச்சே நாசமாப் போன ஆடுக! வளக்கறவர்களுக்கு புத்தி வேணாம்! அடுத்த வூட்டிலே மேய வுட்டா ஆடு வளர்ப்பாக? அதுக வவுத்துல கொள்ளை வர! கீரைப்பாத்திக அம்புட்டும் போச்சே!  ஆரு கொடுப்பாவ? இதுவே நம்மூட்டு  ஆடு அங்கன போயி இருக்கட்டும்... சாமியாடிக்கிட்டு வந்துடுவாகளே, வம்புக்கு கோலூண்ணிகிட்டு....”


சிவகாமியின் சொல் அம்புகள் வேலிப்படலைத் தாண்டி குடிசை முற்றத்தில் அமர்ந்திருந்த பொன்னாத்தாளின் செவிகளில் வந்து விழுந்தன. 


பொறுத்துப்  பொறுத்துப் பார்த்த அவளால் தாங்க முடியவில்லை. 


  “இந்தா, செவகாமிக்கா!  ஆரு சாமியாடிக்கிட்டு வந்தது ஒம் வீட்டுக்கு?  வாயில்லா சீவனுங்க தெரியாம கீரையை மேய்ந்துடுச்சுக.  அதுக்காவ சகட்டு மேனிக்கு பேசுறீயளே” என்றாள். 


இந்த பதிலடியால் உசுப்பப்பட்ட சிவகாமி கோபத்தோடு வேலிபடலருகே வந்தாள்.  “இதுக்கு மட்டும் வக்கனை பேச வந்துட்டீயளே? அம்புட்டு ரோஷம் இருக்கவுக, ஆடுகளை கட்டிப்போட வேண்டியதுதானே? ஒங்க ஆடுவ கொழுக்க என்   வூடு தானா கெடச்சுது” என்றாள். 


  “இந்தா, சும்மா வையாதே. நானே நொந்து கிடக்கேன் நீ வேற குத்தாதே” என்றாள் பொன்னாத்தா.


  “அடியாத்தி! நான் என்னவோ வேலை வெட்டி இல்லாம ஓங்கிட்ட  வந்து வம்பு வளக்கற மாதிரியில்ல பேசுதே? ஆடுகளை வளர்க்கத் தெரியலே . பேச வந்துட்டாளுவ,  பேச....” என்றவாறே   கழுத்தை நொடித்தாள் சிவகாமி.  அவள் நொடித்த நொடிப்பில் காதுகளில் தொங்கிய பாம்படங்கள் ஒரு குலுங்கு குலுங்கி ஊஞ்சலாட்டம் ஆடின. 


  “ஆடுக ஒம்மூட்டு  கீரையைத் தின்னதுக்கு என்ன செய்யணுங்கறே? வெட்டி போடவா!?”


  “நீ வெட்டிதான் போடு,  இல்லே காத்தவராய சாமிக்கு பொங்க தான் வையி எனக்கென்ன வந்தது?” என்று மறுபடி நொடித்து கொண்டே குடிசையினுள் மறைந்தாள் சிவகாமி. 


  “என்ன பொன்னு, ஏன் ஒரு மாதிரி இருக்கே?” காட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கொல்லை கிணற்றில் குளித்துவிட்டு வந்த பொன்னாத்தாவின் கணவன் பாண்டி சாப்பிட அமர்ந்தான். 


சுடுசோற்றில் முருங்கைக் கீரையை பிசைந்து கொண்டேன் மனைவியை பார்த்தான்.  ஏதோ செய்தி இருக்கும் என்பதை மனைவியின் இறுகிய முகமே அவனுக்கு தெரிவித்தது. மழைக்கு முன் மூட்டம் போட்ட வானம் போல அவள் முகம் கனத்திருந்ததை கண்டு அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தான்.


  “வள்ளியூரிலிருந்து சேதி சொல்லி அனுப்புனாக நம்ம மவளுக்கு ரெண்டு பவெனில்  அட்டிலு அவசியம் போட்டாகணுமாம். அட்டியலை ரெடி பண்ணிட்டா கல்யாணத் தேதியும் ரெடினு சொன்னாவ.!”


சோற்றைப் பிசைந்த பாண்டியின் கை அப்படியே நின்றது. 


  “தோடு, ஜிமிக்கி, மூக்குத்திக்கு தான் நம்மாலே ஏலும்னு முன்னமே சொன்னம்ல ?  திடீர்னு அட்டியலு வேணுமும்ன்னா பணத்துக்கு எங்கன போவறது ? ஏதும் தோது படலியே !” யோசனையுடன் சாப்பிட்டு முடித்தான் பாண்டி.


  “மாப்பிள்ளை சொந்தமா பொட்டிக்கடை வச்சிருக்கானில்லே? நாம அட்டிலு போடாட்டி வேற யாராச்சும் கொடுக்கிறவுக வீட்ல சம்மந்தம் பண்ணிக்கிடுவாக.  பையன் நல்ல சம்பாதியக்காரன். எப்படியாச்சும் அட்டிலு பண்ணிட்டம்னா, நம்ம மீனாட்சி அங்கன போயி நல்லா வாழுவா”


  “என்னடி பெனாத்தற?  ரெண்டு பவுன் ஆறாயிறத்துக்கு மேல ரொக்கம் வேணுமே ? எப்படி பெரட்டா ஏலும்?”  பாண்டி யோசனையுடன் கொல்லையிலிருந்த பலா மரத்தை வெறித்தான். 


வெள்ளாடுகள் தழையைத் தின்றபடி குரல் கொடுத்தன. 


பொறி தட்டியது.


முகத்தில் வெளிப்பூச்சுகள் பளீரிட... கணவனை பார்த்தாள் பொன்னாத்தா.  “ஏங்க நம்ம வெள்ளாடுகளை வள்ளியூர் சந்தையிலே வித்து காசாக்கினா அட்டிலு வாங்க ஏலும் இல்லே?”


  மெல்ல சிரித்தான் பாண்டி.. “இந்த ஆறு வெள்ளாடுகள்ல, சினையாட்டைத் தவிர மத்ததை விக்க வெலை பேசிப்புட்டேன்டி! அதை வச்சு தான் நம்ம மீனாட்சி கல்யாணமே நடக்கணும். ?”


கணவனின் பதில், அவளுக்கு ஏமாற்றத்தையே தந்தது. 


  வீட்டில் விற்பதற்கோ, அடகு வைப்பதற்கோ எந்தப் பொருளும் இல்லை.  பொன்னாத்தாகளின் பரம்பரை சொத்தாக இன்று வரை பேணி வந்த ரெண்டு பவுன் பாம்படங்ககளை தான்,  மகள் மீனாட்சிக்கு கல்யாண நகை! ஆம்... அந்த பாம்படங்களை அழித்து தோடு, ஜிமிக்கி செய்ய ஆசாரிடம் தந்து விட்டாள் பொன்னாத்தா.  இப்போது அவளது காதுத்துளைகளில் வெறும் குறுத்தோலை தான் சுருளாக சொருக்கப்பட்டிருக்கின்றன. 


வீட்டில் சட்டி பானைகளைத் தவிர, அலுமினியப்  பாத்திரங்கள் மட்டுமே இருந்தன.


அந்த மண் வீடு மட்டுமே அவர்களுக்கு சொந்தமானது. வெள்ளை அடிக்க நீண்ட காலம் ஆனதால் சுவர்கள் பழுப்பேறி கிடந்தன.  பாண்டியோ பனையேறி அதில் வரும் வருமானத்தில் எப்படியோ காலம் கரைந்து கொண்டிருந்தது. 


இரண்டு பெண்களில் மூத்தவளை எப்படியோ கரையேற்றி விட்டார்கள். இளையவள் மீனாட்சியின் கல்யாணம்தான் கேள்விக்குறியாய் இருந்தது. 


எப்படியோ வள்ளியூரிலிருந்து பெண் பார்க்க வந்தவர்களுக்கு அவளைப் பிடித்து போயிற்று. திருமண தேதியை எதிர்பார்த்து இவர்களுக்கு சம்பந்தி வீட்டிலிருந்து வெடித்த குண்டு அதிர்ச்சியூட்டியது. 


   “அட்டிலு இல்லேன்னா, கல்யாணம் முடிக்க மாட்டவுக இல்லே?” பாதித் தூக்கத்தில் எழுந்து கொண்டு பொன்னாத்தா கேட்டாள். அவளுக்கு தூக்கம் வரவில்லை. 


“ஓறங்குலே ! எழுப்பி என்ன கேள்வி கேட்குதே?” கணவனிடம் அதட்டல் அவளை மேலே பேச விடவில்லை.


சந்தையில் ஆடுகளை விற்றுக் கிடைத்த  பணத்தை முட்டை விளக்கு வெளிச்சத்தில் எண்ணிப் பார்த்தான் பாண்டி. 


“இரண்டாயிரத்து நூறியிருக்கு கல்யாண செலவுக்கு காணும். தோடு, ஜிமிக்கி செய்ய பாம்படத்தை கொடுத்தாச்சு, அட்டிலு தான் பெரிய செலவு,  ஒண்ணும் தோது பண்ண  ஏலலியே... என்ன செய்யறது?” பாண்டி யோசனையுடன் மோட்டு வளையை பார்த்தான்.


  “காசுக்கடை செட்டியாருகிட்டே இந்த வீட்டும் பேரிலே கடனா கேட்டுப் பாருமே”  நூல் போல நெஞ்சில் நம்பிக்கை இழை தறிபோட  கணவனைப் பார்த்தாள் பொன்னாத்தா.


  “இந்தப் பொத்தல் குடிசைக்கு எவண்டி அம்புட்டு பெரிய தொகையை ஒத்தியா தருவான்? வெறும் மண் குடிசை”


  “என்னதான் வழி அப்போ?” தவிப்போடு கேட்டாள் பொன்னாத்தா.


  “அதுதான் எனக்கும் புரிபடலே!”. 


பீடியைப் புகைத்துக் கொண்டே வெளியே வெறித்தான் பாண்டி. இருட்டின் அந்தகாரத்தில்,  வெகு தொலைவில் புள்ளியாய் எங்கோ ஒரு மூலையில் வெளிச்சம் தெரிந்தது. 


  “கந்தசாமிகிட்டே வெவரம் சொல்லி அனுப்பினேனே? என்னா ரோசனை பண்ணிக?” மாப்பிள்ளையின் தந்தை ஆறுமுக நாடார், குடையை மடக்கியபடி தாழ்ந்த கூரைக் குனிந்து திண்ணையில் அமர்ந்தார்.


  “அட்டிலுதான் தோது பண்ணலே இன்னும்...” மெல்ல இழுத்தான் பாண்டி. 


  “கட்டிட்டு வார பொண்ணு கழுத்துல அட்டிலு இல்லேன்னா எங்களுக்கு கவுரவமா இருக்குமா? தோது பண்ண பாருவே!” என்றபடி திரும்பி நடந்த ஆறுமுகம் நாடாரை வெறித்தான் பாண்டி.


ஏதும் பேசத் தோன்றாமல் இருவரும் கல்லாய் இறுகிக் கிடந்தனர். 


இருட்டின் ஆதிக்கம் வெளியில் மட்டுமல்ல அவர்கள் மனதிலும் தான். 


  “என்ன பொன்னாத்தா, சம்பந்திவூட்டுக்காரவுக வந்துட்டு போறப்புல இருக்கு... என்ன சேதி?” வெற்றிலையைக் கொதப்பிக்கொண்டே உள்ளே  வந்தாள் சிவகாமி, ஒருபுறமாய் காதோரம் சரிந்த கொண்டையும், பாம்படமுமாய் வந்த அவள் நெற்றியில் எட்டணா அகலத்திற்கு குங்குமப்பொட்டு ஜொலித்தது. 


நாலு நாட்கள் முன்பு சண்டை போட்டவள், அதை மறந்து உள்ளே வந்ததால், பொன்னாத்தாவும் தயக்கத்தை விரட்டினாள். 


“வா,  செவகாமியக்கா ! மீனாட்சி கல்யாணம் நடக்குமான்னு சம்சயமா இருக்குது.  ரெண்டு பவுன்ல அட்டிலு போட்டாதான் அவ கழுத்துல தாலி ஏறும். முட்டி மோதி பாத்தாச்சு அம்புட்டு பணத்துக்கு வழிவகை தெரியலை. இந்த மனையையும் ஊட்டையும்  கிரயம் பண்ணலாமுன்னா, தொகை கொறவாக் கேக்குறாக! என்ன செய்யறதுன்னே தெரியலே...” அழாத குறையாகச் சொன்னாள் பொன்னாத்தா.


  “அட கவலையைவுடு, எனக்கு என்ன புள்ளையா, குட்டியா? வாய்ச்சவனும் சரியில்லே என் பேர்ல இருந்த பணங்காட்ட எழுதி வாங்கி. கூத்தியாவூடே கதின்னு போயிட்டாக!  நானு பாலை வித்து பயனி வித்து வட்டிக்கு விட்டு பேயா காசு சேர்த்து எந்த புள்ளைக்கு குடுக்க போறேன் ? என்னட ரெண்டு பவுன் அட்டியலை  அந்த பாவி மனுஷனுக்குத் தெரியாம பத்திரமா வச்சிருக்கேன்.  அதைத்தாரேன்.  மீனாட்சி கலியாணத்தை சந்தோஷமா முடி. “


பன்னீராய் பொழிந்த இந்த எதிர்பாராத இன்பத் தாக்குதலால் நெக்குருகி  போனாள் பொன்னாத்தா.


  “ஆத்தா எங்க வவுத்துல  பாலை வார்த்தீக ! நாளைக்கே வீட்டை கெரயம் பண்ணி பத்திரம் எழுதி புடலாம் உங்க ஒத்தாசையை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். “


பாண்டி நெகிழ்ந்து போய் கண்ணீர் வடித்தான். அவளால் நம்ப முடியவில்லை. 


“பத்திரம் கெடக்கட்டும். பக்கத்துவூட்டுக்காரவுக நாணயத்துக்கு எங்காச்சும் பத்திரம் பதியறகளா? நான் வயசான கட்டை பாய்ல, படுக்கையில உளுந்தா  கவனிக்க நாதியத்தவ.  அப்பிடி ஒரு நெலைமை எனக்கு உண்டாச்சுன்னா,  இன்னைக்கு சொல்றேன் பொன்னாத்தா... கூட பொறந்த பொறப்பா நெனச்சு நீ தான் என்னைய கவனிச்சுக் கரையேத்தணும்.  அதுக்கு சம்மானமா நான் அட்டிலு தரேன்.  இது விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்.  சொவர தாண்டி தெரிய வேண்டாம்!”. 


சிவகாமியைக் கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள் பொன்னாத்தா.  பாறை போன்ற கடினமான ஓட்டுக் குள்ளே பதுங்கியிருந்து, சீவப்பட்டதும் தாகம் தீர்க்கும் மென்மையான நுங்கை போன்ற அவள் மனதை புரிந்து கொண்ட சாயல் அந்த இறுக்கத்தில் தெரிந்தது. 

பாக்யா 26.11.92 வெளிவந்தது.

 


அந்த நாட்கள் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா

July 06, 2026 0
அந்த நாட்கள் - எழுதியவர் மறைந்த எழுத்தாளர் கே. ஜெய்புன்னிசா

 

பஸ்ஸை விட்டிறங்கி கிராமத்தை நோக்கி நடந்தேன். 


  நீண்ட இடைவெளிக்குப்பின் தான் பிறந்து வளர்ந்த ஓடி விளையாடிய சொந்த மண்ணை மிதித்தபோது என் உடம்பு சிலிர்த்தது.  சந்தன மணத்தை முகர்ந்தாற்போல் என் மேனியெங்கும் புல்லரித்தது. 


  சொந்த மண்ணை மிதித்ததுமே பழைய நினைவுகள் ஓடி வந்து சிறு குழந்தையா என்னை அணைத்துக் கொண்டன. 


  ஊர் ரொம்பவும் மாறி இருந்தது. 


  இந்த நீண்ட பத்தாண்டு கால இடைவெளியில் அடையாளம் தெரியாதபடி எல்லாமே மாறி போயிருந்தன. 


  ரயிலடிக்கு எதிரே கண்ணுக் கெட்டியவரை பரந்து விரிந்து கிடக்கும் அந்த வெட்டவெளியைக் காணோம்!.


  சின்ன வயதில் அங்கே தான் நானும் அருணாச்சலமும் கால்பந்து ஆடுவோம். ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அங்கே நண்பர்கள் குழாம் கூடிவிடும்.


  இருட்டும்வறை வேர்க்க  விறுவிறுக்க  விளையாடிவிட்டு திரும்பும் வழியில் ஆற்றில் களைப்புத்தீர  நீந்தி குளித்துவிட்டு வேர்வை நாற்றமடிக்கும் மேல் சட்டையை தோய்த்து பிழிந்து ஈர உடம்பில் போட்டுக் கொண்டு மெல்ல நடந்து ஆத்துக்கு போய் சேர்வதற்குள் சட்டை உலர்ந்து விடும்.


  கிராமம் முழுதும் நிழல் பரப்பிக் கொண்டு நிற்கும் வேப்ப மரங்களும், புன்னை மரங்களும், பூவரச மரங்களும் போட்டி போட்டுக் கண்டு வீசும் சுகந்தமான காட்டில் ஈர உடைகள் உலர்ந்து விடும்! 


  வழியிலுள்ள சீனிப் புளியங்காய் மரங்களில் கொத்துக்கொத்தாக தொங்கும் சினைக் காய்களை பறித்து வழி நெடுக  உரித்து தின்று கொண்டே செல்லும் சுகமே அலாதி தான்!


  ஆனால் இன்று...


  ரயிலடிக்கெதிரே விரிந்து கிடந்த பொட்டல் வெளியைக் காணோம்.  வரிசையாக ஓட்டுவில்லை வீடுகள் அணிவகுத்து நின்றன. பாதையோரம் மூங்கில் தட்டி தடுப்பினால் மறைக்கப்பட்டு நடந்து வந்த கிச்சாமி ஐயரின் காப்பி கடையை காணோம். அவரது கையால் பரிமாறப்படும் மல்லி பூ போன்ற இட்லியும் தக்காளி கொத்ச்சும் நாவில் நீரை வரவழைத்தன.  கமகமக்கும்  கள்ளிச்சொட்டுப் போன்ற காப்பியின் ருசியே அலாதி தான். 


  காலையில் ஆத்து சாப்பாட்டை உதறிவிட்டு கிச்சாமி கடை இட்லி  கொத்சுக்காக  பறந்தடித்துக்கொண்டு முதல் ஆளாக மர பெஞ்சில்  இடம் பிடித்தது இன்னும் மறக்கவில்லை. 


அந்த நாட்களை மறக்கத்தான் முடியுமா?


  கிச்சாமி காப்பி கடை இப்போது பெரிய அளவில் கட்டிடமாக காட்சியளித்தது.  கிருஷ்ணா பவன் என்ற பெயர் பலகை பெரிய எழுத்துக்களில் அட்டகாசமாக தெரிந்தது. 


  நவ நாகரிகமான முறையில் ஹோட்டல் மாறியிருந்தது. பளபளக்கும் மேஜை நாற்காலிகள் தலைக்கு மேல் சூழலும் காற்றாடி, முதலாளியின் அருகே பக்தி பாடல்களைப் பாடும் டேப் ரெக்கார்டர், அலங்கார விளக்கு இத்தியாதி...


  எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று இல்லாதது போல சூனியமாகவே எனக்கு தெரிந்தது. 


  “வாங்கோ... வாங்கோ.. சூடா பூப் போல இட்லி இருக்கு... கூடவே தக்காளி கொத்ஸ்..

“ என்று நெற்றி நிறைய திருநீரும் வாய் நிறைய சிரிப்புமாக வரவேற்கும் கிச்சாமி மாமாவை காணோம், அதுதான் சூனியமோ?.


  கல்லாவில் அமர்ந்திருந்த இளைஞருக்கு 32 வயது இருக்கலாம். நல்ல சிவப்பு நிறம் போஷாக்கான  உணவினால் வளர்ந்த செழிப்பு, உடம்பில் தெரிந்தது,  நெற்றியில் திருநீரோடு குங்குமமும் இட்டிருந்தார். 


  மெல்ல அவரை நெருங்கினேன். 


  “இங்க கிச்சாமின்னு காபி கடை நடத்திண்டு இருந்தாரே ஒரு மாமா... நல்ல சேகப்பா... அவர காணோமே” கேட்ட என்னை தீர்க்கமாக பார்த்தார் அந்த இளைஞர்.


  “நீங்க அசலூரா?”


  “ஆமாம் ரொம்ப நாளா வடக்கேயே தங்கி விட்டேன்...” இவருக்கெப்படி தெரிந்தது?”


  “அதான்! அவரை நீங்க பார்க்க முடியாதே...”


  “ஏன் வெளியூர் போயிட்டாரா?”


“இல்லே ! லோகத்தை விட்டே போயிட்டார்.  இது அவர் கட்டின ஹோட்டல் தான்.  போர்டு பாக்கலையா நீர்.  அவர் பிள்ளையாண்டான் நான் தான். இப்ப இதை நடத்திண்டு வரேன். உன்னை எங்கேயோ பார்த்தாப்பல இருக்கே?” என்ற அந்த இளைஞரே நான் வியப்புடன் பார்த்தேன். 


  “நான் தான் ரவிசங்கர்! நீ...நீ சுப்புடு இல்லே ? ரொம்பவும் வளர்ந்துட்டியே! நாம ஒண்ணா சேர்ந்து இந்த கிராமத்துல மாந்தோப்பையே ஒரு கலக்கு கலக்கி இருக்கோமே. தோப்புக்காரன் விரட்டிண்டு வரச்சே கல்த்தடிக்கி நீ விழுந்து நெத்தியிலே இரத்தத்தோட ஓடின ஓட்டம்... இதோ அந்த தழும்பு அப்படியே இருக்கே” நான் படபடப்பாக பேசினேன்.



  “டேய் ரவி நீயாடா? பார்த்து எத்தன மாமாங்கமாச்சு? நன்னா இருக்கியா? ஒக்காரு.  என்ன சாப்பிடறே? ஸ்வீட் சாப்பிடு!” என்று ஆனந்த பெருமிதத்தோடு கல்லாவை தன் தம்பியிடம் ஒப்படைத்து விட்டு எழுந்து வந்த சுப்புடு என்னை ஆதாரத்துடன் அணைத்து கொண்டான். 


  அந்த அமைப்பில் பழைய நட்பின் நெருக்கத்தை உணர்ந்தேன். நன்னா இருக்கியா இலையில் அமர்த்தி அவனே பரிமாறினான் எவ்வளவு வற்புறுத்தியும் காசு வாங்கிக் கொள்ள மறுத்து விட்டான். 


  ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் அவசரமாக விடை பெற்று வெளியேறினேன். 


  அரச மரத்தடி திடலில் ஊர் பிள்ளைகள் படித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்கள் அந்த நாளில்! 


  இன்றோ!


  மாநகராட்சியின் உபயத்தில் வானொலியிலிருந்து “நேத்து ராத்திரி... யம்மா!” ஒலித்துக் கொண்டிருக்க, சில பிள்ளைகள் இடுப்பை வளைத்து தாளத்துக்கேற்றவாறு ஆடிக்கொண்டு இருந்ததைப் பார்த்தபோது மனதை என்னவோ செய்தது. 


  இருட்டிக் கொண்டு வந்தது அந்த பொழுது. 


புதிதாக முளைத்த காலணிகளை தாண்டி கொண்டு வீட்டை அடைந்தேன் அம்மா தான் என்னை வரவேற்றாள். 


  அப்பா போய் ரொம்ப நாளாகி விட்டது. 


“ரவி.. வந்துட்டியா.. வா.. வா! ஒன்னைத்தான் எதிர்பார்த்துண்டு ஒக்கார்ந்திருக்கேன்.  இந்த தள்ளாத வயசிலே அவர் நினைவை சுமந்துண்டு அவர் வாழ்ந்த இந்தாத்திலே வளைய வரேன்,  உனக்கானும் அம்மா நினைப்பு வந்ததே...”  என்று பூரித்தவளாய் திருஷ்டி சுற்றி போட்டு என்னை வரவேற்றாள் அம்மா. 


  இரு கைகளாலும் என்னைத் தொட்டு தடவி மகிழ்ந்தாள். 


அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.. மௌனமாக என்னை பார்த்தாள்.


  “ஏம்மா என்னாச்சு  நோக்கு?” என்றேன் நிதானமாக. 


  “ஒண்ணுமில்லை. என்னாலே ஒன் வாழ்க்கை இப்படியாயிடுத்தே,  நீ ஆசைப்பட்ட அந்த ஓதுவார் பெண் ஜானகியையே பண்ணியிருந்தாக்கா இப்ப நம்ம வம்சம் விளங்க ஒரு குருத்து தளர்ந்திருக்குமே? அந்தத்து... பணம்னு வறட்டுத்தனமாய் பிடிவாதம் பிடிச்சு கண்டது தான் என்ன? இவ்வளவு சொத்து சுகமிருந்தும் நெற்களஞ்சியத்திலே வாரி இறைச்சு அளைய ஒரு பிஞ்சு இல்லையே?  ஹூம் ...எல்லாம் தலையெழுத்து !” அம்மா தனக்கு தானே புலம்பினாள்.


  விளக்கேற்றய பின்னும் கோட்டை போன்ற அந்த கூடம் நிர்சலனமாகவே ஓசையற்றிருந்தது.  அந்த ஆழ்ந்த அமைதியும் ஆள் நடமாட்டமற்ற உறைந்த மௌனமும் எனக்குள் பனிக்கட்டியாய் இறுக்கிய  சோகத்தை வெயில் பட்டாற்போல் கசிய செய்தன. 


  நீராடி விட்டு அம்மா வார்த்து போட்ட தோசையை சாப்பிட்டேன். 


  கால்கள் பரபரக்க எப்போது சொல்வோம் என்று ஏங்கிக் கொண்டிருந்த அந்த இடத்தை நோக்கி மெல்ல நடந்தேன். 


  ஊருக்கு நடு நாயகமாய் இருந்த அந்த சிவன் கோயிலை நோக்கி நடந்தேன். 


மனம் பழைய நினைவுகளில் நீந்தியது. 


ஊதுவத்தியின் சுகந்த மணத்தைப்போல் ஜானகியின் நினைவுகள் மனம் எங்கும் வியாபித்தது. 


ஜானகி...


சிவன் கோயில் ஓதுவாரின் பெண் தான் ஜானகி, அவர் பெற்ற மூன்றுமே பெண்கள் இதுவரை எப்படியோ கரையேற்றி விட்டார், மூன்றாமவள் தான் ஜானகி. 


கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு சிறிய நாட்டு ஓடு வேய்ந்த  பழமையான வீட்டில் தான் அவர்கள் குடும்பம் வாசம் செய்தது. 


விடியற்காலை நாலு மணிக்குகெல்லாம் எழுந்து கிணற்றடியில் குளித்துவிட்டு சிவன் கோயில் வாசலை பெருக்கி சாணம் தெளித்து பிரம்மாண்டமாக கோலமிடுவாள் ஜானகி.  அவளது கை வண்ணத்தில் கோயில் வாசல் மட்டுமல்ல கோயில் பிரகாரமும் நிலைப்படியும் பளிச்சென்று கலைவண்ணத்தோடு காட்சி அளிக்கும். 


அப்பாவுக்கு ஒத்தாசையாக நந்தவனத்தில் இருந்து புதிதாக மலர்ந்த மலர்களை கொய்து பூத்தொடுத்து குடலையில் வைத்து மாலையாக எடுத்து வந்து சாத்துவாள்.


அதுவரை பட்டணத்தில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த நான் அந்த வருடம் படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்கு வந்தேன். 


ஓதுவாரின் குரலோடு கணிரென்று ஒலித்த அவளது குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன். 


நீராடி தளர முடிந்த நீண்ட கூந்தல் நுனியில் சில மலர்கள் வீற்றிருக்க நெற்றியில் திருநீறும் அதன் கீழ் குங்குமமும் காட்சியளித்தது.  மஞ்சள் பூசினால் மினுமினுத்த  உப்பலான கன்னங்கள்! கழுத்தில் கருகமணிச்சரம் மட்டும்.  வலது மூக்கில் ஒற்றை கல் மூக்குத்தி மின்னியது. வாழைத்தண்டு போன்ற பாதங்களில் வெள்ளி கொலுசுகள். 


பட்டணத்தில் விதம் விதமான முகப்பூச்சுகளையும், செயற்கை அலங்காரங்களையும் கண்டு சலித்து போன என் கண்களுக்கு எவ்வித அலங்காரமும் இல்லாத இயற்கையின் தெய்வீக அழகோடு விழிமூடி நின்ற அவள் தேவதையாகவே தெரிந்தாள்.


அவள் கோயில் வாசலில் கோலம் இடும் நேரத்தில் அதிகாலையில் பிரசன்னமாக தொடங்கினேன். 


என் பக்தியை கண்டு அம்மா பூரித்தாள். 


நானோ ஜானகி பக்தன் ஆனேன். 


வலிய அவளோடு பேச்சு கொடுத்தேன்.  அறிமுகத்திற்கு பின் மெல்ல மெல்ல எங்கள் நட்பு வளர்ந்தது. 


கோவில் குளத்து படித்துறையில் இருட்டிய பின் நானும் அவளும் சந்தித்து பேசுவோம். 


ஆற்றில் இருந்து அவள் நீர் குடத்தோடு வரும்போது ஏதோச்சையாக வருவது போல தோளில் துண்டோடு நான் எதிர்ப் படுவது வாடிக்கையாகி விட்டது. 


மற்ற பெண்களிலிருந்து வித்தியாசமான மங்கையாகவே அவள் தெரிந்தாள்.


நந்தவனத்தில் வகை வகையான மலர்களை  பறித்தாலும் அவளது கூந்தலில் எப்போதும் இரண்டொரு செண்பக பூக்களே காட்சி தரும்.


முகப்பவுடரே தீண்டாமல் மஞ்சள் பூச்சில் மினுமினுக்கு முகம்!.


  நாளெல்லாம் அகலத்தில் நெற்றியில் இட்டுக் கொள்ளும் குங்குமம். 


எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் அதை பற்றி பூரணமாக தெரிந்து கொண்டு அளவளாவும் பாங்கு!.


ஓ! இவள் அழகி மட்டுமல்ல மகா புத்திசாலியும் கூட! 


  அதிர பேசாமலே கதை பேசும் விழிகள்.  சிரிக்கும் போது கூட சத்தம் வெளியே கேட்காத அடக்கம். 


  ஏழை ஓதுவார் வீட்டில் இப்படி ஒரு புதையலா? இவள் எனக்கே எனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற இறுமாப்போடு இருந்தேன். 


  நந்தவனத்தின் பின்புறம் தெற்கு மூலையிலிருந்து பன்னீர் மரத்தடியில் இருள் மண்டி கிடக்கும் அந்தி நேரத்தில் அவளோடு அமர்ந்து பேசிய நாட்கள் ஏராளம். 


  “ரவி... நீங்க என்னக் கை விட்டுட மாட்டீங்களே?” சாட்டையாய் முன்புறம் புரளும் பின்னலை விரல்களால் அளைந்து கொண்டே என் முகத்தருகே குனிந்து அவள் கேட்டபோது நான் என் வசம் இழந்தேன்.  சட்டென்று அவளை இழுத்து மார்போடு அணைத்து கொண்டேன். 


  “என் மீது நம்பிக்கையில்லாம ஏன் இப்படி கேட்கிற ஜானா” என்றேன். 


“நீங்க பண்ணையார் வீட்டு ஒரே வாரிசு, பெரிய படிப்பெல்லாம் படிச்சவரு.  ஏழை ஓதுவாரோட பொண்ணை பண காசில்லாத ஓங்காத்துலே ஏத்துப்பாளா? பெத்தவாளை எதிர்த்து நிற்க ஒங்களாலே முடியுமா?” பயத்தோடு கேட்டாள் ஜானா. 


  “பெத்தவா குறுக்கே நின்னா... கல்யாணமே வேணான்னுடுவேன்.... ஆமாம் ஒன்னையத்தவிர வேறொருத்தியக் கட்டிக்க மாட்டேன்!”.


அந்த அரையிருட்டில் மூக்குத்தி மின்ன அவள் என் கைகளை சட்டென்று பற்றி கண்களில் ஒற்றிக் க் கொண்டாள்.


  அப்போதுதான் நினைவு வந்தவனாய் சட்டை பையிலிருந்து அந்த சிறிய பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினேன்.


  “என்ன இது?” என்று ஆர்வத்தோடு திறந்து பார்த்தவள் வியப்போடு சந்தோஷப் பூக்கள் விழிகளில் சொரிய என்னை பார்த்தாள். “என்ன ரவி இது.  எனக்கெதுக்கு இது?” என்றாள்.


  “அன்னிக்கு கோயில் பிரகாரத்தில் ஒரு மாமி போட்டிருந்த ஒத்தை முத்து மூக்குத்தியை பார்த்து ரொம்ப அழகா இருக்குன்னு ஆசைப்பட்டியே அதான் பக்கத்தூரு நகை கடைக்கு போய் உனக்காக வாங்கிண்டு வந்தேன்!”


சிறிய நட்சத்திர பொட்டாய் நடுவில் பளிரென்று ஒற்றைக் கல்லாய் முத்து பதித்த அந்த சின்னஞ்சிறு மூக்குத்தியை பார்த்து முகம் மலர சிரித்தாள் ஜானா.


  அடுத்த கணம் திருப்பிக் கொடுத்தாள்.


  என் புருவங்கள் உயர்ந்தன வினாக்குறியோடு!


  “ஆத்துல ஏதுனு கேட்பாளே இதை நான் எப்படி போட்டுக்கொள்ள முடியும்?”


  “என் பரிசா வச்சுக்கோ.  கல்யாணத்துக்குபுறமா போட்டுக்கோயேன்...” முகம் மலர, மனம் குதூகலிக்க அதை வாங்கிக் கொண்டாள் ஜானா.


  எங்கள் நட்பு அரசல் புரிசலாக வீட்டுக்கு தெரிந்த போது...


எண்ணெயில் இட்ட வடாமாய் பொரிந்தார் என் தந்தை. “இந்த கிராமத்துக்கே பெரிய பண்ணையா இருக்கிற நம்ம அந்தஸ்து எங்கே? உடுத்தின பொடவைக்கு மாத்துப் பொடவைக்கே  வக்கில்லாத தரித்திரம் பிடிச்ச ஓதுவார் பெண் எங்கே? என்முன்னாடி மேல் வேஷ்டியை இடுப்பிலே  கட்டிண்டு பவ்யமா கும்பிடற அந்த ஏழை ஓதுவார் எனக்கு சம்பந்தியா? ஒருநாளும் இது நடக்காது.  பொண்ண விட்டு ஒன்னை வசமா அமுக்கிட்டதா அந்த ஓதுவார் நினைச்சுண்ட்டிருக்கிறாராக்கும்? நடக்குமா? சீட்டைக் கிழிச்சிட மாட்டேன்.  மாப்பிள்ளைக்கு வைரமோதிரம் பண்ணிப்போட முடியுமா... இந்த ஜென்மத்திலே அவராலே!”


அப்பாவின் கெடுப்பிடிக்கு முன்னால் என் போராட்டங்கள் பயனற்று போயின. 


ஓதுவார் என் தந்தையால் அவமானப்படுத்தப்பட்டார். 


  அப்பா நினைத்தபடி பெரிய இடத்தில் எனக்கு பெண் பேசி திருமணம் நடந்தது. 


சொந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் வடக்கே வேலை தேடிக்கொண்டு போய்விட்டேன். கடந்த பத்தாண்டுகளாய் ஊர் பக்கம் திரும்பவில்லை.  எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவள் முகத்தில் விழிப்பேன்.?


  சொத்தும், சீருமாக “அந்தஸ்தோடு” வந்த ‘பெரிய’ இடத்துப் பெண்ணான என் மனைவி நிர்மலா ஒரு நாள் எதிர் பிளாட் குஜராத்திக்காரனோட ஓடிப் போனாள்.


  பிழைப்பைப் தேடி போன இடத்திலும் அவமானம் துரத்தியது.


  எனக்கு வேண்டியதுதான். நம்பியவர்களுக்கு செய்த துரோகத்திற்கு சரியான தண்டனை.


  பாரிசவாயுவில்  (stroke) படுத்த அப்பாவும் இரண்டு ஆண்டுகளில் போய் சேர்ந்தார்.


கிராமத்தில்  தனியாக தவித்துக் கொண்டிருந்த அம்மாவின் வேண்டுகோள்களை தாங்கி வந்த கடிதங்கள் நாளடைவில் என் நெஞ்சில் மாற்றத்தை உண்டு பண்ணவே செய்தன.


  எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கொண்டு வடக்கே இருந்தே திரும்பிவிட்டேன். இனிமேல் கடைசி வரை நிரந்தரமா இங்கேயே தங்கிவிடும் உத்தேசத்தோடு! 


அதன் பிறகு ஜானகி என்ன ஆனாள் என்றே தெரியவில்லை. அவளைப் பற்றிய சேதி எதுவுமே என் செவிகளுக்கு எட்டவில்லை சொல்வதற்கும் ஆள் இல்லை. 


எப்படியாவது அவளை ஒரு தரம் பார்த்து மனப்பூர்வமாய் மன்னிப்பு கேட்க வேண்டும்! 


அவளைப் பற்றி யாரிடம் கேட்பது வாய் வரவில்லை. 


சிவன் கோயில் பக்கத்தில் அவளை காணோம் தெப்பக்குளத்து படித்துறையிலும் அவளை தேடி என் கண்கள் பூத்து போயின. 


ஏமாற்றத்தோடு நடந்தேன். 


பூக்கூடையோட எதிரே வந்த அந்த பெண்ணை கண்டதும் பொறி தட்டியவளாய் அப்படியே நின்றேன். 


“பூ வேணுமா... மல்லிகை பூ.. கதம்பம்.. செண்பகப்பூ கூட இருக்கு.”


தூக்கி வாரி போட்டது. 


“நீ...நீ... ஜானகி இல்லே” என் குரலைக் கேட்டு விருட்டென நிமிர்ந்தாள் அவள்.


  வெள்ளைப் புடவையில் மூலியான கழுத்து செழுமையெல்லாம் வடிந்து போன மெலிந்த தேகம் இவளா என்  ஜானகி?


  கனவுகள் மிதந்த விழிகளில் ஏமாற்றம் தேங்கிப்போய்.... ஓ ...இவள் இன்று இந்த நிலைமையடைய யார் காரணம் நான் தானே?


  ஒருவேளை இவளை நான்  கைப்பிடித்திருந்தால்... இவள் பழைய ஜானகியாய் மூக்குத்தி மின்ன குத்து விளக்காய் ஒளித்திருப்பாளோ?


  “என்னைத் தெரியலையா ஜானகி ? நான்தான் ரவி எல்லாமே கனவாகி போச்சு. என்னை மன்னிச்சிடு” நாதழுதழுத்தது.


  என் அருகில் வந்தவள் தீர்க்கமாய் பார்த்தாள். விழிகளில் நீர் பெருகியது அதே பன்னீர் பூ மரத்தடி.


  “எல்லாமே என் தலையெழுத்து.  யார் யாருக்கு பகவான் தலையில என்ன எழுதியிருக்கானோ... அதுப்படி நித்திய கர்மா நடக்கிறது.  எனக் கொடுப்பினை இல்லே அப்பாவும் போயிட்டார் என்னை கைப்பிடித்த பிராமணரும் ஆறு மாசத்தில் போய்ச்சேர்ந்துட்டார். முன்னமே இருதயக் கோளாறு உள்ளவர்ங்றந்து பின்னாடி தான் தெரிஞ்சது.  தெரிஞ்சு என்ன செய்ய ? எல்லாம் பிராப்தம்?” சட்டென்று  அருகேயுள்ள குடிசையில் மறைந்தாள்.


என்  முன் நீட்டிய அவளது கரத்தில் அந்த பெட்டி இருந்தது. ஒரு காலத்திலே நீங்க எனக்கு கொடுத்த பரிசு ஆசையா போட்டுக்கற சந்தர்ப்பம் இதுவரை வரலே. நம்ம கல்யாணத்துக்கப்புறமா போட்டுக்கோணும்ன்னு நெனச்சிண்டுருந்தேன்.  நடக்கலே,  இப்போ....நிரந்தரமா மூக்குத்தியை கழற்ற வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்துடுச்சு ஏன்னா.... நான் இப்ப சுமங்கலி இல்லே இந்தாங்கோ”


  என் கையில் அந்த சிறிய பெட்டித் திணித்துவிட்டு நடந்தாள் ஜானகி.  ஒற்றைக்கல் முத்து மூக்குத்தி என்னை  பார்த்து ஏளனமாய் சிரித்தது.

  ராஜம் இதழில் வெளிவந்தது.

  ஆண்டு ஜூன் 1991.